ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Saturday, December 25, 2010

இராவணன்

முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் எடுத்து தவங்கள் செய்தவன், முக்கடவுள்களில் முதல் கடவுளாகிய பிரம்மனிடம் அரக்கர் தேவர் முதலானவர்கள் யாராலும் வெல்லப்படாத வரத்தை வாங்கியவன், உலகையே அடக்கி வைத்த வலிமையுடைவன் என்ற பெருமைகளையெல்லாம் “முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்நாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த புயவலியும்” உடையவனாக இருந்தவன் இராவணன். அவன் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவன். பல கலைகளில் வல்லமை பெற்றவன். நாட்டு மக்களை செல்வச் செழிப்புடன் வைத்திருந்தவன். இப்படி எத்தனையோ சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலும் அவனுக்குக் கடைசி வரை பெருஞ்சிறப்பைக் கொடுத்தது அவனது வீரமே. மாரீசன் ஆரம்பித்து, இந்திரசித்து, கும்பகர்ணன் போன்ற பலரும் அவனுக்கு அறிவுரை சொல்லியும் அவன் கேட்காத போது வேறு வழியில்லாமல் அவன் பக்கம் இருந்து தங்கள் அழிவைத் தேடிக் கொண்டார்கள். ஆனால் அத்தனை பேரைப் பழி கொடுத்த போதும் அவன் வருந்தினானே ஒழிய மனம் மாறவில்லை. அறிவுரைகளைக் கேட்ட பின்பும் என்ன நடந்தாலும் பின் வாங்க மாட்டேன் என்ற வீரத்துடனே தான் ஒவ்வொரு சூழ்நிலையிலும் இருந்தான். உதாரணத்திற்கு அவனுடைய மகன் இந்திரசித்து எதிரிகள் சாதாரண மானிடர்கள் அல்ல என்ற உண்மையைப் போரின் போது அறிந்து சொல்லி இராமனுடன் போர் புரிவதைத் தவிர்க்க முயற்சித்த போது அவன் மகனிடம் சொல்லும் சொற்கள் வீரமும், கர்வமும் நிரம்பிய சொற்கள். மிக மிக அழகாக கம்பன் இராவணன் வார்த்தைகளாகச் சொல்வதைக் கேளுங்கள். ”முன்பு இராமனுடன் போரிட்டு இறந்தவர்கள் எல்லாம் இந்தப் பகையை முடிவுகட்டுவார்கள் என்றோ, இறக்காமல் இருப்பவர்கள் எல்லாம் இராமனை வெற்றி கொள்வார்கள் என்றோ, ஏன் நீயே அவனை வென்று வருவாய் என்ற நம்பிக்கையிலோ நான் இந்தப் பகையை வளர்க்கவில்லை. என் ஒருவனையே நம்பி தான் இந்த நெடும்பகையை நான் தேடிக் கொண்டேன்”. முன்னையோர் இறந்தோர் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும் பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர்ப் பெயர்வர் என்றும் உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் என்னையே நோக்கி நான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன். ”நான் வெற்றி பெறா விட்டாலும் கூட வேதம் உள்ளளவும் இராமன் பெயர் நிலைத்து நின்றால் என் பெயரும் நிலைத்து தானல்லவா ஆக வேண்டும். இறப்பை எக்காலத்திலும் தவிர்க்க முடியுமா? அது பொதுவானதேயல்லவா? இன்றிருப்பவர்கள் எல்லாம் ஒரு நாள் இறப்பார்கள். புகழுக்கு இறப்புண்டோ” வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பெயர் நிற்குமாயின்? பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்தன்றோ? இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதியுண்டோ? அவன் கூறியது போல் இராமனை அறிந்தவர் யாரும் இராவணனை அறியாமல் இருக்க முடியுமா? யுகங்கள் கழிந்த பின்னும் இராமன் புகழுடன் இராவணன் பெயரும்  போர்க்களம் :
இராமன்-இராவணன் போர் கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டது. மாவீரன், மகாவள்ளல், இராவணேசுவரன் என ஈசுவரப் பட்டம் சூட்டிப் போற்றப்பட்ட இலங்கை வேந்தனின் கடைசி அத்தியாயம் நெருங்கி விட்டது. கொடுத்துக் கொடுத்துச் சிவந்த இராவணனின் கரங்கள் இன்று அம்பு தொடுத்துத் தொடுத்து சிவந்து இருந்தன. குவிந்த பகைவர்களின் குலம்வீழ வென்று பழகியவன் இன்று தன் குலமனைத்தும் வீழக்கண்டும் தன் வீரம் வீழாது நிற்கிறான். மன்னாதி மன்னன், இராஜாதி இராஜன், இலங்கை வாழ் மக்களுக்குக் கண்போன்றவன், அறிவுக் கடலாணவன், ஈரைந்து சிரம் கொண்டவன், கைலையைத் தன் தோள்களில் சுமந்தவன், சாமகானம் இசைத்து ஈசனையே வயப்படுத்தியவன், இன்று விதியின் வயப்பட்டு நிற்கிறான் போர்க்களத்தில்.
ஒருபுறம் இராவணன் தனித்து நிற்க, மறுபுறம் அன்பே உருவாகி, அகத்தில் நிறைவாகி, பொங்கியெழும் தோள்களோடும், பூத்தமலர் மார்பினோடும், வெற்றிநடைக் கால்களோடும் கார்மேகவண்ணன் இராமபிரான் தன் இளவல் இலக்குவன், சுக்ரீவன், விபீஷணன் முதலியோருடன் நிற்கின்றார் ஆயுதபாணியாக.
இராவணன் : இராகவா ! இன்று போய் நாளை வா என்றாயே, வந்திருக்கிறேன், உனக்கென கூற்றத்தையும் துணைக்கழைத்துக்கொண்டு. இராவணனின் அத்தியாயத்திலே இந்நாள் கடைசி ஏடு. இதில் பொறிக்கப்படும் கருத்துக்களை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. உம்... எடு வில்லை. உலகத்தின் ஐயத்தைத் தீர்த்து வைப்போம்.
( என்று கூறி இராவணன் வில்லெடுக்க, இராமணும் வில்லெடுக்கிறான் புன்னகைத்துக்கொண்டே. இருவருக்கும் போர் தீவிரமாக நடக்கிறது. முதலில் இராமனின் அம்பு இராவணனின் மார்பில் தைக்கவே அலறிக்கொண்டு கீழே விழ, விபீஷணன் அண்ணாவென அலறுகிறான். பின்பு மனத்தை அடக்கிக்கொண்டு நிற்க, கற்புக்கரசி மண்டோதரி ஓடி வருகிறாள். வந்தவள் இராவணன் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு, தூக்கி வாரிப்போட்டவளாக )
மண்டோதரி : பிரபோ, மானத்தை நிலைநாட்டி விட்டீர்களா ? என்னைப் பிரிந்து போய்விட்டீர்களா? தெய்வமே. நீதியும் பண்பும் வைத்திழைத்த மணிமுடி நிலத்தில் உருண்டுவிட்டது, வளையாத செங்கோல் ஏந்திய கரம் துவண்டுவிட்டது, அது வரைந்த இலங்கையின் புகழ்மிக்க வரலாறு இன்றோடு முடிந்து விட்டது. விபீஷணரே நம் குலம் விளங்க நீர் ஒருவராவது வாழும். எங்கள் செயல் பிடிக்காவிட்டாலும், மானத்திற்கென வாழ்ந்த எங்களின் சரித்திரத்தை உங்களாட்சியில் மறைத்துவிடாதீர். உங்கள் தமையன் கொண்டவளை மறந்து, அடுத்தவர் மனைவி மீது ஆசை வைத்து அழிந்தார் என பிறர் பழிக்க விட்டுவிடாதீர். வாழ்வின் கடைசிப்படியில் நிற்கும் எனது இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவீர்களா ?
விபீஷணன் : ( வேதனையோடு ) நிறைவேற்றுகிறேன் அண்ணி, நிறைவேற்றுகிறேன். ஆனால் மண்ணாசை கொண்டு உங்களைப் பிரிந்துவிட்டேன் என்று தவறாக நினைக்காதீர்கள் அண்ணி.
மண்டோதரி : இலை விபீஷணரே இல்லை. தமயனாக இருந்தாலும் தவறு என்று எண்ணி அதைத் துணிவோடு கூறி, அதற்காகப் பிரிந்த உமது நேர்மையைப் பாராட்டுகிறேன்.
( இராவணனனைப் பார்த்து )பிரபோ, மண்டோதரியைத் தனியே தவிக்கவிட்டு வந்துவிட்டோமே என்று வருந்தாதீர்கள். இதோ உங்கள் மனைவி நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறாள்.
( என்று பேசிவளாக இதயம் வெடித்து உயிர் விடுகிறாள். அண்ணி என்று அலறுகிறார் விபீஷணர். மண்டோதரியின் சவத்தைக் கண்டு கண்கலங்கியவனாக இராமன் )
இராமன் : கணவனுக்காகச் சுகபோகத்தைத் துறந்த சீதையை அன்று கண்டேன், உயிரையே துறந்த ஓர் உத்தமியை இன்று காண்கிறேன். பெண்குலமே, தியாகத்தின் விளைநிலமே, நீ வாழ்க.
------------------------------------------------------இடம் - இராவணனின் அறை :
இராவணன் படித்த வேத சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள், கிரந்தங்கள், தமிழின் இயல், இசைக்கூத்து முதலியவற்றின் சுவடிகள், சுவற்றில் வைத்திருக்கும் பெரிய மாடங்களில் வைக்கப்பட்டிருக்கும் இசைக்கருவிகளுடன் வைக்கப்பட்டிருக்கின்றன. இருமருங்கிலும் எழில்வண்ணச் சிற்பங்கள் நிற்கின்றன. அவைகளில் குழலும் மத்தளமும் வாசிப்பது போன்றும், சில ஆடற்பாணியமைந்தனவாகவும் இருக்கின்றன. அறையின் நடுநாயகமாக நடராசர் சிலையும் அதற்குக் கீழ் ஒரு சிவலிங்கமும் வைக்கப்பட்டிருக்கின்றன. அறையின் நடுவில் அமைந்திருக்கும்
பொன் வண்ணமான மேடையில் இராவணன் வாசிக்கும் மகரயாழும் வைக்கப்பட்டிருக்கின்றன. விபீஷணன், இராம இலக்குவனருடனும் சீதாப்பிராட்டியுடனும் அங்கு வருகிறார்.
விபீஷணன் : வாருங்கள் பிரபோ, வாருங்கள். இதுதான் என் தமையனின் நூலகம். அவரே அருகிலிருந்து அமைத்தது. அரசியல் பணிகள் முடிந்தபின்பு ஓய்வு நேரத்தில் இங்குதான் சுவடிகளையும் இசை நுணுக்கங்களையும் ஆராய்ந்து கொண்டிருப்பார்.
( இராமர், சீதை, இலக்குவன் மூவரும் அறையின் அமைப்பைக் கண்டும் அழகைக் கண்டும் வியக்கின்றனர். )
இராமன் : இராவணன் பெரிய கலைவல்லுநர் என்பதை அவர் அமைத்திருக்கும் அறையே காட்டுகிறது.
இலக்குவன் : அவருக்கு வாசிக்கத் தெரியாத இசைக் கருவிகளே இல்லை போலிருக்கிறது அண்ணா !
சீதை : பிரபோ, இந்த மகரயாழைப் பார்த்தீர்களா ? கனத்த குடம் அமைந்த இந்த யாழை எந்த பாணன் எடுத்து வாசித்தானோ தெரியவில்லை ?
( என்று கூறி அந்த யாழின் நரம்புகளைத் தட்டுகிறார் சீதாப்பிராட்டி. அதிலிருந்து ஐங்கர ஓசை எழுகிறது. அதையொட்டி இராவணன் பாடும் சாமகானம் ஒலிப்பது போன்ற பிரமை விபீஷணனிற்கு. மெய்மறந்தவனாக அதை ரசித்துக் கொண்டிருக்கும் விபீஷணனின் கண்களில் நீர் மல்குகிறது. அதைக் கண்ட இராமன். )
இராமன் : விபீஷணா ஏன் கண் கலங்குகிறாய் ?
விபீஷணன் : தேவியார் மீட்டிய இந்த யாழின் நாதத்தைக் கேட்கும்போது அண்ணன் பாடும் சாமகானம் என் நினைவில் ஒலித்தது. அது என் கண்களையும் குளமாக்கிவிட்டது பிரபோ. அவரின் இசை இன்பத்தை நுகராத மக்களே இந்நாட்டில் இல்லையெனலாம்.
இராமன் : இராவணன் தம் கொற்றத்தால், கொடைகுணத்தால் மட்டும் மக்களுக்கு தொண்டு செய்யவில்லை, இசைபாடி மகிழ்விக்கிம் ஒரு பாணனாகவும் இருந்திருக்கிறார்.
இலக்குவன் : விபீஷணரே, அந்தச் சுவடிகள் ?
விபீஷணன் : தமிழ் பனுவல்கள் அவை. எம் தமையனார் எம்மொழியையும் பேதமறக் கற்றவர் என்பதற்கு இவைகள் சான்றாகும்.தமிழ் அகத்தியரின் குழலில் பிறந்தது என்றாலும் வாழ்ந்தது எம் தமையனாரின் அகத்தில் என்பார் எம் பெரியோர்.
இராமன் : ( வருந்தியவனாக ) இத்தனையும் கற்றறிந்த ஒரு வித்தகன், அருமறையும் அறவுணர்வும் கொண்ட விற்பன்னன், ஏழிசைப்பேரறிவாளன் - அவன் மறைவுக்கு நான் காரணமாகிவிட்டேனே என்று நான் வருந்துகிறேன்....சரி, நடந்தது நடந்துவிட்டது, விபீஷணா 14 ஆண்டுகள் முடியப்போகிறது. அயோத்தியில் தம்பி பரதன் எம் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். நாம் உடனே புறப்படவேண்டும். அரும்பண்புடைய அனுமனை அழைத்து வா. நாம் அவரைத் தூது அனுப்பிவிட்டு பின்பு புறப்படுவோம்.
அனைவரும் அவ்வறையை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களோடு சேர்ந்து அருவமாய் இன்னொன்றும் அவ்வறையை விட்டு வெளியேறியது, அது வேறு யாருமில்லை பக்தி, நீதி, நேர்மை, வஞ்சம், சூது, பேராசை முதலியனவையின் துணைகொண்டு கற்பகோடி காலமாக இவ்வுலகை ஆட்டி வைக்கும் விதியே. இதுவரை இங்கு சாமகானம் இசைக்க இராவணன் இருந்தான் ஆனால் அவனும் இப்பொழுது இல்லை இனி இங்கு நாம் கேட்டு ரசிக்க என்ன இருக்கிறது என்று நினைத்து விதி வெளியேறியதா இல்லை இன்னும் இராமனுடனான நமது வேலை முடியவில்லை, அயோத்தியில் விளையாடவேண்டியது நிரம்பவே உள்ளது என நினைத்து இராமனுடன் சென்றதா தெரியவில்லை. ஆனால் விதியே உன்னால்தானே ஒரு மாபெரும் வீரனை, கொடைநல்கும் கொற்றனை, இசை அரசனை, ஈசன் பக்தனை இழந்தது இவ்வுலகம், இன்னும் அடங்கவில்லையா உன் தாகம் ?
அறிவோடு மனந்தன்னில் திடம் கொள்ளுவோம் - நாம்
அதனாலே விதிதன்னை இனி வெல்லுவோம்
வருங்காலம் இதுவென்று குறி சொல்லுவோம் - விதி
வழியேதும் நடக்காத முறைசெய்யுவோம்

No comments: