ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Friday, May 20, 2011

ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்


இங்கு வித்தைகளுள் சிறந்ததும், ரகசியங்களுள் மேலானதுமான பக்தி யோகத்தின் சொரூபமும் மேன்மையும், பலன் முதலானவையும் கூறப்படுகின்றன. பக்தி யோகத்தில் இறங்குவோன், அதில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். பின்வரும் கடவுள் பெருமைகளையும் நன்குணர வேண்டும்:- கடவுள் எங்கும் நிறைந்த பரம்பொருள். உலகமனைத்தும் அவரிடத்திலேயே நிலைபெற்று நிற்கிறது.
பிரளய காலத்தில் உலகங்கள் அனைத்தும் அவற்றின் முதற் கிழங்காகிய பிரகிருதியில் மறைகின்றன. சிருஷ்டி காலத்தில் கடவுள் அவைகளைப் பிரகிருதியினின்றும் வெளிப்படுத்துகிறார். உலகத்திற்கு இறைவனும், இருப்பிடமும், சரணும், தோழனும் கடவுளே. பக்தர்கள் தங்கள் செயல்களனைத்தும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

மற்ற விஷயங்களைத் துறந்து கடவுளையே தியானம் செய்பவன் எத்தகைய கொடிய பாவியாயினும் நல்லோன் என்றே கருதப்பட வேண்டும். கடவுளிடத்திலேயே மனத்தைச் செலுத்த வேண்டும். கடவுளையே நேசிக்க வேண்டும். கடவுளையே வணங்க வேண்டும். இப்படி இருப்பவன் கடவுளையே அடைவான்.

श्रीभगवानुवाच
इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे ।
ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥९- १॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
இத³ம் து தே கு³ஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே |
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸு²பா⁴த் || 9- 1||
ஸ்ரீப⁴க³வாநுவாச = கடவுள் சொல்லுகிறான்
யத் ஜ்ஞாத்வா து = எதை தெரிந்து கொள்வதாலேயே
அஸு²பா⁴த் மோக்ஷ்யஸே = தீமையில் இருந்து (துக்கவடிவமான உலகியலில் இருந்து) விடுபடுவாயோ
கு³ஹ்யதமம் = ரகசியமான விஞ்ஞானத்துடன் கூடிய
இத³ம் ஜ்ஞாநம் = இந்த ஞானத்தை
அநஸூயவே தே = அசூயை யற்றவனாகிய உனக்கு
விஜ்ஞாநஸஹிதம் ப்ரவக்ஷ்யாமி = விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன்
கடவுள் சொல்லுகிறான்: அசூயை யற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய்.

राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमम् ।
प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम् ॥९- २॥
ராஜவித்³யா ராஜகு³ஹ்யம் பவித்ரமித³முத்தமம் |
ப்ரத்யக்ஷாவக³மம் த⁴ர்ம்யம் ஸுஸுக²ம் கர்துமவ்யயம் || 9- 2||
இத³ம் = இது
ராஜவித்³யா ராஜகு³ஹ்யம் பவித்ரம் உத்தமம் = ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது
ப்ரத்யக்ஷாவக³மம் = கண்ணெதிரே காண்டற்குரியது
த⁴ர்ம்யம் = அறத்துக் கிசைந்தது
ஸுஸுக²ம் கர்தும்= செய்தற்கு மிக எளிது
அவ்யயம் = அழிவற்றது
ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது. கண்ணெதிரே காண்டற்குரியது. அறத்துக் கிசைந்தது. செய்தற்கு மிக எளிது. அழிவற்றது.

अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप ।
अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि ॥९- ३॥
அஸ்²ரத்³த³தா⁴நா: புருஷா த⁴ர்மஸ்யாஸ்ய பரந்தப |
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி || 9- 3||
பரந்தப = பகையைச் சுடுவோய்
அஸ்ய த⁴ர்மஸ்ய = இந்த அறத்தில்
அஸ்²ரத்³த³தா⁴நா: புருஷா = நம்பிக்கையற்ற மனிதர்
மாம் அப்ராப்ய = என்னை அடையாமல்
ம்ருத்யு ஸம்ஸார வர்த்மநி = நரக சம்சாரப் பாதைகளில்
நிவர்தந்தே = மீளுகின்றனர்
பகையைச் சுடுவோய், இல்லறத்தில் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக சம்சாரப் பாதைகளில் மீளுகின்றனர்.

मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना ।
मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः ॥९- ४॥
மயா ததமித³ம் ஸர்வம் ஜக³த³வ்யக்தமூர்திநா |
மத்ஸ்தா²நி ஸர்வபூ⁴தாநி ந சாஹம் தேஷ்வவஸ்தி²த: || 9- 4||
அவ்யக்தமூர்திநா = அவ்யக்த வடிவாய்
மயா = என்னால்
இத³ம் ஸர்வம் ஜக³த் = இந்த அனைத்து உலகம் முழுவதும்
ததம் = சூழ்ந்திருக்கிறேன்
ஸர்வபூ⁴தாநி மத்ஸ்தா²நி = பூதங்களெல்லாம் என்னிடத்தே நிலைபெற்றன
அஹம் தேஷு அவஸ்தி²த: = நான் அவற்றில் நிலை பெற்று இருக்கவில்லை
அவ்யக்த வடிவாய் நான் இவ்வுலக முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைபெற்றன. அவற்றுட்பட்டதன்று என்நிலை. 4

न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् ।
भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः ॥९- ५॥
ந ச மத்ஸ்தா²நி பூ⁴தாநி பஸ்²ய மே யோக³மைஸ்²வரம் |
பூ⁴தப்⁴ருந்ந ச பூ⁴தஸ்தோ² மமாத்மா பூ⁴தபா⁴வந: || 9- 5||
பூ⁴தாநி ந மத்ஸ்தா²நி ச = பூதங்கள் என்னுள் நிலை பெறுவன அல்ல
மே ஐஸ்²வரம் யோக³ம் பஸ்²ய = இந்த ஈஸ்வரத் தன்மையுடைய யோக சக்தியை பார்
பூ⁴தப்⁴ருத் ச = பூதங்களைத் தாங்குபவனும்
பூ⁴தபா⁴வந: ச = பூதங்களை உண்டாக்குகிறவனாக இருந்த போதிலும்
மம ஆத்மா = என் ஆத்மா
பூ⁴தஸ்த²: ந = உயிரினங்களில் நிலை பெற்று இருப்பதில்லை
(மற்றொரு வகையால் நோக்குமிடத்தே) பூதங்கள் என்றும் நிற்பனவுமல்ல, என் ஈசுவர யோகத்தின் பெருமையை இங்குப் பார், பூதங்களைத் தரிக்கிறேன். அவற்றுட்பட்டேனல்லேன். என் ஆத்மாவில் பூத சிந்தனை இயல்கிறது.

यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान् ।
तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय ॥९- ६॥
யதா²காஸ²ஸ்தி²தோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ³ மஹாந் |
ததா² ஸர்வாணி பூ⁴தாநி மத்ஸ்தா²நீத்யுபதா⁴ரய || 9- 6||
ஸர்வத்ரக³: மஹாந் வாயு: = எங்கும் செல்கின்ற, பெருங்காற்று
யதா² நித்யம் ஆகாஸ²ஸ்தி²த: = எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ
ததா² ஸர்வாணி பூ⁴தாநி = அவ்வாறே எல்லா பொருட்களும்
மத்ஸ்தா²நீ இதி உபதா⁴ரய = நிலைபெற்றனவென்று தெரிந்துகொள்
எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று, எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்துகொள். 6

सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् ।
कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम् ॥९- ७॥
ஸர்வபூ⁴தாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் |
கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ³ விஸ்ருஜாம்யஹம் || 9- 7||
கௌந்தேய = குந்தி மகனே
கல்பக்ஷயே ஸர்வபூ⁴தாநி = கல்ப முடிவில் எல்லா உயிர்களும்
மாமிகாம் ப்ரக்ருதிம் யாந்தி = என் இயல்பை எய்துகின்றன
கல்பாதௌ³ தாநி புந: = மறுபடி கல்பத்தின் துவக்கத்தில் அவற்றை மீண்டும்
அஹம் விஸ்ருஜாமி = நான் படைக்கிறேன்.
குந்தி மகனே, கர்ப்ப நாசத்தால் எல்லா உயிர்களும் என் இயல்பை எய்துகின்றன. மறுபடி கர்ப்பத் தொடக்கத்தில் நான் அவற்றைப் படைக்கிறேன்.

प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः ।
भूतग्राममिमं कृत्स्नमवशं प्रकृतेर्वशात् ॥९- ८॥
ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்⁴ய விஸ்ருஜாமி புந: புந: |
பூ⁴தக்³ராமமிமம் க்ருத்ஸ்நமவஸ²ம் ப்ரக்ருதேர்வஸா²த் || 9- 8||
ப்ரக்ருதே: வஸா²த் = இயற்கையின் வசத்தால்
அவஸ²ம் இமம் க்ருத்ஸ்நம் பூ⁴தக்³ராமம் = தன் வசமிழந்த இந்த அனைத்து உயிர் தொகுதிகளையும்
புந: புந: = திரும்ப திரும்ப
ஸ்வாம் ப்ரக்ருதிம் அவஷ்டப்⁴ய= என்னுடைய இயற்கையின் வசத்தால் ஏற்றுக் கொண்டு
விஸ்ருஜாமி = படைக்கிறேன்
என் சக்தியில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் பூதத் தொகுதி முழுவதையும் என் வசமின்றி, சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன்.

न च मां तानि कर्माणि निबध्नन्ति धनंजय ।
उदासीनवदासीनमसक्तं तेषु कर्मसु ॥९- ९॥
ந ச மாம் தாநி கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய |
உதா³ஸீநவதா³ஸீநமஸக்தம் தேஷு கர்மஸு || 9- 9||
த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா!
தேஷு கர்மஸு = அந்த தொழில்களில் (கர்மங்களில்)
அஸக்தம் = பற்றில்லாமலும்
தாநி கர்மாணி = அந்த செயல்கள்
உதா³ஸீநவத் ஆஸீநம் ச = (ஒதுங்கி) மேற்பட்டவன் போல் இருக்கின்ற
மாம் ந நிப³த்⁴நந்தி = என்னை கட்டுப் படுத்துவதில்லை
தனஞ்ஜயா, என்னை அத்தொழில்கள் தளையுறுத்தா. அவ்வினைகளிடையே நான் மேற்பட்டவன் போல் அமர்ந்திருக்கிறேன்.

मयाध्यक्षेण प्रकृतिः सूयते सचराचरम् ।
हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते ॥९- १०॥
மயாத்⁴யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம் |
ஹேதுநாநேந கௌந்தேய ஜக³த்³விபரிவர்ததே || 9- 10||
கௌந்தேய = குந்தி மகனே
அத்⁴யக்ஷேண மயா = தலைவனான என்னால் (என் மேற்பார்வையில்)
ப்ரக்ருதி: ஸசராசரம் = ப்ரக்ருதியானது அசைவன, அசையாதன எல்லாம்
ஸூயதே = தோற்றுவிக்கிறது.
அநேந ஹேதுநா = இந்த காரணத்தால்
ஜக³த்³ விபரிவர்ததே = உலகமே சுழல்கிறது.
என் மேற்பார்வையில் சக்தி சராசர உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே, இந்த ஏதுவால் உலகமே சுழல்கிறது.

अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितम् ।
परं भावमजानन्तो मम भूतमहेश्वरम् ॥९- ११॥
அவஜாநந்தி மாம் மூடா⁴ மாநுஷீம் தநுமாஸ்²ரிதம் |
பரம் பா⁴வமஜாநந்தோ மம பூ⁴தமஹேஸ்²வரம் || 9- 11||
மம பரம் பா⁴வம் = என்னுடைய மேலான இயல்பை
அஜாநந்த: மூடா⁴ = அறியாதவர்களான மூடர்கள்
மாநுஷீம் தநும் = மனித உடலை
ஆஸ்²ரிதம் பூ⁴தமஹேஸ்²வரம் = தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு தலைவனான
மாம் அவஜாநந்தி = என்னை புறக்கணிக்கிறார்கள்
மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர்.

मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतसः ।
राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः ॥९- १२॥
மோகா⁴ஸா² மோக⁴கர்மாணோ மோக⁴ஜ்ஞாநா விசேதஸ: |
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்²ரிதா: || 9- 12||
மோகா⁴ஸா²: = வீணாசையுடையோர்
மோக⁴கர்மாண: = வீண் செயலாளர்
மோக⁴ஜ்ஞாநா = வீணறிவாளர்
விசேதஸ: = மதியற்றோர்
ராக்ஷஸீம் ஆஸுரீம் மோஹிநீம் ச = மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளின்
ப்ரக்ருதிம் ஏவ ஸ்²ரிதா: = இயல்பையே சார்ந்து நிற்கின்றனர்
வீணாசையுடையோர், வீண் செயலாளர், வீணறிவாளர், மதியற்றோர், மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளைச் சார்ந்து நிற்கின்றனர். (ராக்ஷத, அசுர, மோகினி சக்திகளாவன – அவா, குரூரம், மயக்கம் என்ற சித்த இயல்புகள்).

महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः ।
भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् ॥९- १३॥
மஹாத்மாநஸ்து மாம் பார்த² தை³வீம் ப்ரக்ருதிமாஸ்²ரிதா: |
ப⁴ஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூ⁴தாதி³மவ்யயம் || 9- 13||
து பார்த² = ஆனால் பார்த்தா
தை³வீம் ப்ரக்ருதிம் ஆஸ்²ரிதா: = தெய்விக இயல்பைக் கைகொண்ட
மஹாத்மாந: = மகாத்மாக்கள்
மாம் பூ⁴தாதி³ம் அவ்யயம் ஜ்ஞாத்வா = என்னை எல்லா உயிர்களுக்கும் முதல் என்றும், அழிவற்றவன் என்றும் அறிந்து
அநந்யமநஸ: = வேறு எதிலும் நாட்டமில்லாத மனதுடன்
ப⁴ஜந்தி = வழிபடுகிறார்கள்
பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைகொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள்.

सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः ।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ॥९- १४॥
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்²ச த்³ருட⁴வ்ரதா: |
நமஸ்யந்தஸ்²ச மாம் ப⁴க்த்யா நித்யயுக்தா உபாஸதே || 9- 14||
த்³ருட⁴வ்ரதா: = திடவிரதத்துடன்
ஸததம் கீர்தயந்த: ச = இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும்
யதந்த: ச = முயற்சி புரிவோராகவும்
நமஸ்யந்த: ச = என்னைப் பக்தியால் வணங்குவோராய்
நித்யயுக்தா: ப⁴க்த்யா உபாஸதே = நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்
திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते ।
एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतोमुखम् ॥९- १५॥
ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே |
ஏகத்வேந ப்ருத²க்த்வேந ப³ஹுதா⁴ விஸ்²வதோமுக²ம் || 9- 15||
அந்யே மாம் ஜ்ஞாநயஜ்ஞேந ஏகத்வேந = வேறு சிலர் ஞான வேள்வியால் ஒன்றிய பாவனையுடன்
யஜந்த: அபி = வழிபட்டுக் கொண்டும்
ச ப³ஹுதா⁴ விஸ்²வதோமுக²ம் = மற்றும் சிலர் விராட்ஸ்வரூபத்துடன் ஈஸ்வரனாக என்னை
ப்ருத²க்த்வேந உபாஸதே = தன்னிலும் வேறாக எண்ணி உபாசிக்கிறார்கள்
வேறு சிலர் ஞான வேள்வியால் வேட்போராய் என்னை ஒருமையாகவும் பன்மையாகவும் பலவாறாக எல்லாவிடத்தும் வழிபடுகிறார்கள். 15

अहं क्रतुरहं यज्ञः स्वधाहमहमौषधम् ।
मन्त्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम् ॥९- १६॥
அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதா⁴ஹமஹமௌஷத⁴ம் |
மந்த்ரோऽஹமஹமேவாஜ்யமஹமக்³நிரஹம் ஹுதம் || 9- 16||
அஹம் க்ரது: = நான் ஹோமம்
அஹம் யஜ்ஞ: = நான் யாகம்
அஹம் ஸ்வதா⁴ = நான் ‘ஸ்வதா’ என்ற வாழ்த்துரை
அஹம் ஔஷத⁴ம் = நான் மருந்து
அஹம் மந்த்ர: = நானே மந்திரம்
அஹம் ஆஜ்யம் = நானே நெய்
அஹம் அக்³நி = நானே தீ
அஹம் ஹுதம் = நான் அவி
அஹம் ஏவ = நானே தான்!
நான் ஓமம்; நான் யாகம்; நான் ‘ஸ்வதா’ என்ற வாழ்த்துரை; நான் மருந்து; மந்திரம்; நான் நெய்; நான் தீ; நான் அவி.

पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रमोंकार ऋक्साम यजुरेव च ॥९- १७॥
பிதாஹமஸ்ய ஜக³தோ மாதா தா⁴தா பிதாமஹ: |
வேத்³யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச || 9- 17||
அஸ்ய ஜக³த: தா⁴தா = இந்த உலகம் அனைத்தையும் தாங்குபவனும்
பிதா மாதா பிதாமஹ: = தந்தை, தாய், பாட்டனாரும்
வேத்³யம் பவித்ரம் = அறியத் தக்கவனும், புனிதமானவனும்
ஓங்கார: = ஓங்காரமும்
ருக் ஸாம யஜு: ச = ரிக்; ஸாம; யஜுர் என்ற வேதங்களும்
அஹம் ஏவ = நானே தான்
இந்த உலகத்தின் அப்பன் நான்; இதன் அம்மா நான்; இதைத் தரிப்போன் நான்; இதன் பாட்டன் நான்; இதன் அறியப்படு பொருள் நான்; தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்; நான் ஸாமம்; நான் யஜுர்.

गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥९- १८॥
க³திர்ப⁴ர்தா ப்ரபு⁴: ஸாக்ஷீ நிவாஸ: ஸ²ரணம் ஸுஹ்ருத் |
ப்ரப⁴வ: ப்ரலய: ஸ்தா²நம் நிதா⁴நம் பீ³ஜமவ்யயம் || 9- 18||
க³தி: = அடையத் தக்க பரம பதம்
ப⁴ர்தா = காப்பவன்
ப்ரபு⁴: = ஆள்பவன்
ஸாக்ஷீ = நல்லன – தீயனவற்றைப் சாட்சியாக இருந்து பார்ப்பவன்
நிவாஸ: = உறைவிடம்
ஸ²ரணம் = சரண் புகலிடம்
ஸுஹ்ருத் = தோழன்
ப்ரப⁴வ: ப்ரலய: = தொடக்கமும் அழிவும்
ஸ்தா²நம் நிதா⁴நம் = நிலையாகத் தாங்குமிடமும், நிதானமும்
அவ்யயம் பீ³ஜம் = அழியாத விதை
இவ்வுலகத்தின் புகல், இதனிறைவன், இதன் கரி, இதனுறையுள், இதன் சரண், இதன் தோழன், இதன் தொடக்கம், இதன் அழிவு, இதன் இடம், இதன் நிலை, இதன் அழியாத விதை.

तपाम्यहमहं वर्षं निगृह्णाम्युत्सृजामि च ।
अमृतं चैव मृत्युश्च सदसच्चाहमर्जुन ॥९- १९॥
தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்³ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி ச |
அம்ருதம் சைவ ம்ருத்யுஸ்²ச ஸத³ஸச்சாஹமர்ஜுந || 9- 19||
அஹம் தபாமி = நான் வெப்பந் தருகிறேன்
வர்ஷம் நிக்³ருஹ்ணாமி உத்ஸ்ருஜாமி ச = மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன்
அம்ருதம் ச ம்ருத்யு: ச = நானே அமிர்தம்; நானே மரணம்
ஸத் அஸத் ச அஹம் அர்ஜுந = உள்ளதும்; இல்லதும் நான் அர்ஜுனா!
நான் வெப்பந் தருகிறேன்; மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன். நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா, உள்ளதும் யான்; இல்லதும் யான்.

त्रैविद्या मां सोमपाः पूतपापा यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ।
ते पुण्यमासाद्य सुरेन्द्रलोक मश्नन्ति दिव्यान्दिवि देवभोगान् ॥९- २०॥
த்ரைவித்³யா மாம் ஸோமபா: பூதபாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்க³திம் ப்ரார்த²யந்தே |
தே புண்யமாஸாத்³ய ஸுரேந்த்³ரலோகமஸ்²நந்தி தி³வ்யாந்தி³வி தே³வபோ⁴கா³ந் || 9- 20||
த்ரைவித்³யா: ஸோமபா: = மூன்று வேதம் அறிந்தோர், சோமம் உண்டோர்
பூதபாபா = பாவம் அகன்றவர்கள்
மாம் யஜ்ஞை: இஷ்ட்வா = என்னை வேள்விகளால் உபாசித்து
ஸ்வர்க³திம் ப்ரார்த²யந்தே = வானுலகு தர வேண்டுகின்றனர்
தே புண்யம் ஸுரேந்த்³ரலோகம் ஆஸாத்³ய = அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை அடைந்து
தி³வி = ஸ்வர்கத்தில்
தி³வ்யாந் தே³வபோ⁴கா³ந் அஸ்²நந்தி = திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்
சோமமுண்டார், பாவமகன்றார், மூன்று வேதமறிந்தார், என்னை வேள்விகளால் வேட்டு வானுலகு தர வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை யெய்தி வானுலகில் திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்.

ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति ।
एवं त्रयीधर्ममनुप्रपन्ना गतागतं कामकामा लभन्ते ॥९- २१॥
தே தம் பு⁴க்த்வா ஸ்வர்க³லோகம் விஸா²லம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸ²ந்தி |
ஏவம் த்ரயீத⁴ர்மமநுப்ரபந்நா க³தாக³தம் காமகாமா லப⁴ந்தே || 9- 21||
தே தம் விஸா²லம் ஸ்வர்க³லோகம் பு⁴க்த்வா = அவர்கள் விரிவாகிய வானுலகத்திலே இன்புற்று
புண்யே க்ஷீணே மர்த்யலோகம் விஸ²ந்தி = புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய உலகத்துக்குத் திரும்புகிறார்கள்
ஏவம் த்ரயீத⁴ர்மம் = இப்படி மூன்று வேத முறைகளை
அநுப்ரபந்நா: காமகாமா: = சார்ந்திருக்கிற போகப் பற்றுள்ளவர்கள்
க³தாக³தம் = திரும்ப திரும்ப பிறந்து இறத்தலை
லப⁴ந்தே = அடைகிறார்கள்
விரிவாகிய வானுலகத்திலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள். இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.

अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥९- २२॥
அநந்யாஸ்²சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹம் || 9- 22||
அநந்யா: யே ஜநா = வேறு எதிலும் நாட்டமில்லாத எந்த பக்தர்கள்
மாம் சிந்தயந்த: = என்னை தியானித்துக் கொண்டு
பர்யுபாஸதே = எந்த பயனும் எதிர்பார்க்காது உபாசிக்கின்றாரோ
நித்யாபி⁴யுக்தாநாம் தேஷாம் = இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுடைய
யோக³க்ஷேமம் அஹம் வஹாமி = நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பாவேன்
வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன்.

येऽप्यन्यदेवताभक्ता यजन्ते श्रद्धयान्विताः ।
तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ॥९- २३॥
யேऽப்யந்யதே³வதாப⁴க்தா யஜந்தே ஸ்²ரத்³த⁴யாந்விதா: |
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி⁴பூர்வகம் || 9- 23||
கௌந்தேய = குந்தியின் மகனே
யே ப⁴க்தா = எந்த பக்தர்கள்
ஸ்²ரத்³த⁴யா அந்விதா: அபி = நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும்
அந்ய தேவதா: யஜந்தே = மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ
தே அபி அவிதி⁴ பூர்வகம்= அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்)
மாம் ஏவ யஜந்தி = என்னையே தொழுகின்றனர்
அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர்.

अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥९- २४॥
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ரேவ ச |
ந து மாமபி⁴ஜாநந்தி தத்த்வேநாதஸ்²ச்யவந்தி தே || 9- 24||
ஹி ஸர்வயஜ்ஞாநாம் = ஏனெனில் எல்லா வேள்விகளிலும்
போ⁴க்தா ச ப்ரபு⁴ ச அஹம் ஏவ = உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான்!
து தே மாம் = ஆனால் என்னை அவர்கள்
தத்த்வேந ந அபி⁴ஜாநந்தி = உள்ளபடி அறியாதவர்
அத: ச்யவந்தி = ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்
நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்; என்னை மனிதர் உள்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வார்.

यान्ति देवव्रता देवान्पितॄन्यान्ति पितृव्रताः ।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ॥९- २५॥
யாந்தி தே³வவ்ரதா தே³வாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா: |
பூ⁴தாநி யாந்தி பூ⁴தேஜ்யா யாந்தி மத்³யாஜிநோऽபி மாம் || 9- 25||
தே³வவ்ரதா: தே³வாந் யாந்தி = தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்
பித்ருவ்ரதா: பித்ரூந் யாந்தி = பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார்
பூ⁴தேஜ்யா பூ⁴தாநி யாந்தி = பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்
மத்³யாஜிந: அபி மாம் யாந்தி = என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்
தேவ விரதிகள் தேவரை எய்துவார்;
பிதிர்க்களை நோற்பார் பிதிர்க்களை யடைவார்;
பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்;
என்னை வேட்போர் என்னை எய்துவார்.


पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥९- २६॥
பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |
தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||
ய: ப⁴க்த்யா = எவர் அன்புடனே
பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் = இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும்
மே ப்ரயச்ச²தி = எனக்கு அளிப்பவன் ஆயின்
ப்ரயதாத்மந: = முயற்சியுடைய அவர்
ப⁴க்த்யுபஹ்ருதம் = அன்புடன் அளித்த
தத் அஹம் அஸ்²நாமி = அவற்றை நான் அருந்துகிறேன்
இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.

यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥९- २७॥
யத்கரோஷி யத³ஸ்²நாஸி யஜ்ஜுஹோஷி த³தா³ஸி யத் |
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மத³ர்பணம் || 9- 27||
கௌந்தேய = குந்தி மகனே!
யத்கரோஷி = எந்த கர்மத்தை செய்கிறாயோ
யத³ஸ்²நாஸி = எதை உண்கிறாயோ
யத் ஜுஹோஷி = எதை ஹோமம் செய்கிறாயோ
யத் த³தா³ஸி = எதை தானம் அளிக்கிறாயோ
யத் தபஸ்யஸி = எந்த தவம் செய்கிறாயோ
தத் மத³ர்பணம் குருஷ்வ = அதை எனக்கு அர்ப்பணம் செய்து விடு
நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்.

शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः ।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि ॥९- २८॥
ஸு²பா⁴ஸு²ப⁴ப²லைரேவம் மோக்ஷ்யஸே கர்மப³ந்த⁴நை: |
ஸம்ந்யாஸயோக³யுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி || 9- 28||
ஏவம் ஸு²ப⁴ அஸு²ப⁴ ப²லை: = இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களை
கர்மப³ந்த⁴நை: = கர்மத் தளைகளினின்றும்
மோக்ஷ்யஸே = விடுபடுவாய்
ஸந்யாஸ யோக³ யுக்தாத்மா = துறவெனும் யோகத்திசைந்து
விமுக்த: = விடுபட்டவனாக
மாம் உபைஷ்யஸி = என்னையும் பெறுவாய்
இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்திசைந்து விடுதலை பெறுவாய். என்னையும் பெறுவாய்.

समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः ।
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् ॥९- २९॥
ஸமோऽஹம் ஸர்வபூ⁴தேஷு ந மே த்³வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய: |
யே ப⁴ஜந்தி து மாம் ப⁴க்த்யா மயி தே தேஷு சாப்யஹம் || 9- 29||
அஹம் ஸர்வபூ⁴தேஷு ஸம: = நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன்
மே த்³வேஷ்ய: ந = எனக்குப் பகைவனுமில்லை
ப்ரிய: ந அஸ்தி = நண்பனுமில்லை
து யே ப⁴க்த்யா மாம் ப⁴ஜந்தி = ஆனால் என்னை அன்புடன் தொழுவோர்
தே மயி ச அஹம் தேஷு அபி = அவர்கள் என்னிடமும் நான் அவர்களிடமும் (காணக் கூடியவனாக இருக்கிறேன்)
நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன்.

अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः ॥९- ३०॥
அபி சேத்ஸுது³ராசாரோ ப⁴ஜதே மாமநந்யபா⁴க் |
ஸாது⁴ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்³வ்யவஸிதோ ஹி ஸ: || 9- 30||
ஸுது³ராசார: அபி = மிகவும் தீய நடத்தை உள்ளவனானாலும்
அநந்யபா⁴க் = வேறு எதிலும் நாட்டமின்றி என் பக்தனாக ஆகி
மாம் ப⁴ஜதே சேத் = என்னை வழிபடுவானாகில்
ஸ: ஸாது⁴: ஏவ மந்தவ்ய: = அவன் நல்லோனென்றே கருதுக
ஹி ஸ: ஸம்யக் வ்யவஸித: = ஏனெனில் அவன் நன்கு முயல்கின்றான்
மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில், நன்கு முயல்கின்றான் ஆதலின்,

क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छान्तिं निगच्छति ।
कौन्तेय प्रति जानीहि न मे भक्तः प्रणश्यति ॥९- ३१॥
க்ஷிப்ரம் ப⁴வதி த⁴ர்மாத்மா ஸ²ஸ்²வச்சா²ந்திம் நிக³ச்ச²தி |
கௌந்தேய ப்ரதி ஜாநீஹி ந மே ப⁴க்த: ப்ரணஸ்²யதி || 9- 31||
க்ஷிப்ரம் த⁴ர்மாத்மா ப⁴வதி = விரைவிலேயே தர்மாத்மாவாக ஆகிறான்
ஸ²ஸ்²வத் ஸா²ந்திம் நிக³ச்ச²தி = நித்திய சாந்தியு மெய்துவான்
கௌந்தேய = குந்தி மகனே
மே ப⁴க்த: = என்னுடைய பக்தன்
ந ப்ரணஸ்²யதி = அழிவதில்லை
ப்ரதி ஜாநீஹி = சத்தியத்தை உறுதியாக அறிந்து கொள்
அன்னவன் விரைவிலே அறவானாவான்,
நித்திய சாந்தியு மெய்துவான்.
குந்தி மகனே; குறிக்கொள்!
என தன்பன் சாகமாட்டான்.


मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥९- ३२॥
மாம் ஹி பார்த² வ்யபாஸ்²ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: |
ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம் || 9- 32||
ஹி பார்த² = ஏனெனில் பார்த்தா
ஸ்த்ரிய: வைஸ்²யா: ஸூ²த்³ரா: = பெண்களாயினும் எந்த வர்ணத்தவராயினும்
ததா² = அதே போல
பாபயோநய: = பாவிகளானாலும்
யே அபி ஸ்யு: = எவர்களாக இருந்தாலும்
தே அபி மாம் வ்யபாஸ்²ரித்ய = அவர்களும் என்னை தஞ்சமடைந்து
பராம் க³திம் யாந்தி = மேலான கதியை அடைகிறார்கள்
பாவிகளென்னைப் பணிவாராயினும்,
மாதரேனும், வைசியரேனும்,
சூத்திரரும் பரகதி பெறுவார்.


किं पुनर्ब्राह्मणाः पुण्या भक्ता राजर्षयस्तथा ।
अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व माम् ॥९- ३३॥
கிம் புநர்ப்³ராஹ்மணா: புண்யா ப⁴க்தா ராஜர்ஷயஸ்ததா² |
அநித்யமஸுக²ம் லோகமிமம் ப்ராப்ய ப⁴ஜஸ்வ மாம் || 9- 33||
புண்யா: = புனிதமான
ப்³ராஹ்மணா: ராஜர்ஷய: ப⁴க்தா: = அந்தணரும் ராஜரிஷிகளும் எனக் கன்பராயின்
கிம் புந: = சொல்லவும் வேண்டுமோ!
அநித்யம் அஸுக²ம் = நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
இமம் லோகம் ப்ராப்ய = இவ்வுலகப் பிறவி யெய்திய நீ
மாம் ப⁴ஜஸ்வ = என்னை வழிபடக் கடவாய்
அப்படியிருக்கத் தூய்மை யார்ந்த
அந்தணரும் ராஜரிஷிகளும்
எனக் கன்பராயின், என்னே! ஆதலால்;
நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
இவ்வுலகப் பிறவி யெய்திய நீ
என்னை வழிபடக் கடவாய்.


मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः ॥९- ३४॥
மந்மநா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு |
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: || 9- 34||
மந்மநா: ப⁴வ = மனத்தை எனக்காக்கி விடு
மத்³ப⁴க்த: = பக்தியை எனக்காக்கு
மத்³யாஜீ = என்னைத் தொழு
மாம் நமஸ்குரு = என்னை வணங்கு
ஏவம் ஆத்மாநம் யுக்த்வா = இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி
மாம் ஏவ ஏஷ்யஸி = என்னையே அடைவாயாக
மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.

ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे राजविद्याराजगुह्ययोगो नाम नवमोऽध्याय: || 9 ||
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்’ எனப் பெயர் படைத்த
ஒன்பதாம் அத்தியாயம் நிறைவுற்றது.

No comments: