ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது.
ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம்.
இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும் உமையும் தன்னில் பாதி என்கிறானோ?
முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.
பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!
அவற்றில்:
சேஷநாகம் - கால சுயற்சியையும்
கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும்
கங்கை - அவன் வற்றா அருளையும்
ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும்
குறிக்கின்றன.
பின் இடது கரத்தில் அக்னி, சிவன் – சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் முதல் எழுத்தான ‘ந’ வைக் குறிக்கிறது இந்தக் கரம்.
ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, ‘ம’ என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.
வலது காலின் கீழே இருப்பது அசுரன் – ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.
தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.
முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘வா’ வை குறிக்கிறது.
இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் – அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.
பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான ‘சி’ யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.
அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, ‘அஞ்சாதே’ என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான ‘ய’ வை காட்டுகிறது. ஆடல் வல்லான் நமக்கெல்லாம் அபயம் தர வல்லான்! ஆக்கமும், காத்தலும் அவன் வழி வகுத்தலே! எத்தனைப் பிறவி வருமோ என்று பதறுவார், எம் ஐயன், அல்லல் எனும் மாசறுத்து ஆட்கொளும் தெய்வமாம், தில்லை நகர் வாழ், அதிபதி ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பில் உறையும் நடனபதியின் வலது கரத்தை பார்த்தால் போதாதோ?
நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம்.
இந்த நாகம் – சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!
பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே ‘மகாகாலம்’. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் ‘இரட்டைத் தாமரை’ பீடத்தின் பெயர் ‘மஹாம்புஜ பீடம்’. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!
அவனே ஆண்டவன். எல்லாப் பொருளிலும் அரூபமாய் மறைந்திருப்பவன். எல்லாப் பொருளுக்கும் மெய்ப்பொருளாய் இருப்பவன். அவன் ஆக்கத்தினை கூர்ந்து நோக்கியவாறு, எல்லா ஆக்கத்திலும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறான். அவனே எங்கும் தூய உயர் ஞானமாய் இருக்கிறான்.
- யஜூர் வேதம், ஸ்வேதஸ்வதார உபநிஷதம்
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
- பன்னிரெண்டாம் திருமுறை
No comments:
Post a Comment