அப்பூதி அடிகள்
தனமாவது திருநாவுக்கரசின் சரணம் என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்தி வைத்து ஆங்கு அவன் வண் தமிழ்க்கே
இனமாத் தனது பெயர் இடப் பெற்றவன் எங்கள் பிரான்
அனமார் வயல் திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே
அப்பூதி அடிகள்மனமார் புனற்பந்தர் வாழ்த்தி வைத்து ஆங்கு அவன் வண் தமிழ்க்கே
இனமாத் தனது பெயர் இடப் பெற்றவன் எங்கள் பிரான்
அனமார் வயல் திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே
பொன்னி நதி வளம் பெருக்கும் சோழ வளநாட்டில் காவிரியின் வடகரையில் திருவையாற்றுக்குக் கிழக்கே மூன்று கல் தொலைவில் அமைந்துள்ள புண்ணியத் தலம் திங்களூர். இங்கு அறம் செழிக்க நற்செயல்கள் பல புரிந்து வாழ்ந்த அந்தண குலத்தோர் அப்பூதி அடிகள். இவர் பாவங்கள் அனைத்தையும் நீக்கியவர்; புண்ணியங்கள் அனைத்தையுமே தாங்கியவர். அத்தகையவர் திருமணம் செய்து கொண்டு திங்களூரில் தனது மனையாளொடும் வாழ்ந்து வந்தார். இந்த அந்தணக் குலத் தோன்றல் சிவ பக்தியில் ஆழ்ந்து திளைத்தவர். அடுத்தவர் துன்பம் தாங்காத உள்ளம் படைத்த இவர் ஓர் புண்ணியமூர்த்தி.
அப்பர் சுவாமிகள் மீதுற்ற பக்தி
இப்படி அறனும், வளமும் செழிக்க அற்புதமான இல்லற வாழ்க்கை வாழ்ந்து வந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசரைப் பற்றி கேள்வியுற்றார். இவரை அப்பர் என்றும் மக்கள் போற்றி வந்தார்களல்லவா? அத்தகைய மகா புண்ணியவானைக் கண்ணார தரிசிக்கவும், மனதார வணங்கி அவர்தம் ஆசியினைப் பெற்றிடவும் அனுதினமும் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்த பக்தி ரசம், அப்பர் மேல் அவர் கொண்ட காதல், பக்தி, ஈடுபாடு, இவர் சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களுக்குமே "திருநாவுக்கரசு" என்றே பெயர் வைத்து, அப்பெயரை பலமுறை உச்சரிக்கும் பாக்கியம் பெற்றிருந்தார். வீட்டிலிருந்த படி, மரக்கால் இவைகளுக்கும் திருநாவுக்கரசுதான். பசுக்கள், எருமைகள் அனைத்துக்கும் அவர் பெயரேதான். அவ்வூரில் அவர் செல்வந்தராகையால் ஒரு மடம் கட்டி அதற்கும் திருநாவுக்கரசர் என்று பெயரிட்டார். வழிப்போக்கர்கள் தாகசாந்தி செய்து கொள்வதற்கென்று பல தண்ணீர்ப் பந்தல்களை நாட்டி வைத்தார். அவைகளுக்கும் திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் என்றே பெயரிட்டார். அவ்வூர் மக்களின் பயன்பட்டுக்காக அவர் எடுப்பித்த குளங்களுக்கும், நந்தவனங்களுக்கும் அதே பெயர் தான். என்ன இது? இப்படியொரு பக்தியா? தான் கண்ணால் கண்டிராத ஒரு சிவபக்தர், தலைசிறந்த மகான் அவர்மீது கொண்ட காதலால் அவர் செய்து வைத்த அத்தனைக்கும் அந்த மகானின் பெயரே வைத்தார் என்றால் அவரது பக்தியை என்னவென்று சொல்லிப் புகழ்வது?
நாவுக்கரசர் திங்களூர் வருகை
இப்படியிருக்கும் நாளில் திருநாவுக்கரசர் சுவாமிகள் பற்பல சிவத்தலங்களுக்கும் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு காவிரியின் கரையோடு வந்து கொண்டிருந்தார். அப்படி அவர் திங்களூரைக் கடந்து செல்கையில் அவர் கண்களில் பட்ட அனைத்து இடங்களிலும் "திருநாவுக்கரசு" என்ற தனது பெயர் இருக்கக் கண்டார். அப்படி அவர் திகைத்து ஒரு தண்ணீர் பந்தலருகில் நின்றிருந்த சமயம் அங்கிருந்தவரைப் பார்த்து, இந்தத் தண்ணீர் பந்தலுக்கும் மற்ற பல அறக்காரியங்களுக்கும் இவ்வூரில் "திருநாவுக்கரசு" என்று பெயரிடப்பட்டிருப்பதன் காரணத்தை வினவினர். அதற்கு அந்த மனிதர் இவ்வூரில் அப்பூதி அடிகள் என்றொரு சிவபக்தர் இருக்கிறார். அவர் இந்தத் தண்ணீர் பந்தலுக்கு மட்டுமல்ல, அவர் செய்திருக்கிற அனைத்து தர்ம காரியங்களுக்கும் அதாவது அவர் கட்டிய சத்திரம், கிணறுகள், நந்தவனம், குளம் எல்லாவற்றுக்கும் திருநாவுக்கரசு என்றுதான் பெயரிட்டிருக்கிறார் என்று கூறினார்.
இப்படி அவர் சொன்னதைக் கேட்ட திருநாவுக்கரசு சுவாமிகள் திகைத்துப் போனார். இவர் ஏன் அப்படி எல்லா அறச்செயல்களுக்கும் திருநாவுக்கரசர் என்ற பெயரைச் சூட்டியிருக்கிறார், அப்படிப்பட்ட புண்ணியவான் எங்கே இருக்கிறார் என்று வினவினார். அதற்கு அந்த மனிதர், அப்பூதியடிகள் இதே ஊரைச் சேர்ந்தவர்தான். இந்நேரம் வரை இங்குதான் இருந்தார். இப்போதுதான் தன்னுடைய வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். அவர் வீடும் அதோ மிகச் சமீபத்தில்தான் இருக்கிறது என்றார் அவர்.
அப்பூதியார் இல்லத்தில்
உடனே திருநாவுக்கரசு சுவாமிகள் அப்பூதி அடிகளுடைய வீடு அமைந்திருக்கிற தெருவுக்குச் சென்று அவர் வீடு எது என்று விசாரித்து அந்த வீட்டின் வாயிலில் போய் நின்றார். அப்போதுதான் உள்ளே நுழைந்து கால்கைகளைச் சுத்தம் செய்துவிட்டுத் திரும்பிய அப்பூதியாரின் கண்களில் வாயிலில் வந்து நிற்கும் ஒரு முதிய சிவனடியார் பட்டுவிட்டார். உடனடியாக வாயிலுக்கு வந்து அங்கு நிற்கும் சிவனடியாரை வணங்கி திண்ணையில் அமரச் செய்தார். அப்பூதி அடிகளைக் கண்ட திருநாவுக்கரசரும் உளம் குளிர அந்த பெரியோனை வாழ்த்தி வணங்கினார்.
திண்ணையில் அமர்ந்த திருநாவுக்கரசரை அப்பூதியடிகள் "ஐயனே! தேவரீர் இவ்விடத்திற்கு எது குறித்து எழுந்தருளியிருக்கின்றீர்" என வினவினார். அதற்கு அப்பர் சுவாமிகள் சொன்னார், " அன்பரே! யான் திருப்பழனம் எனும் சிவத்தலத்தில் கோயில் கொண்டுள்ள எம் ஐயனை தரிசித்துவிட்டு வரும் வழியில் நீர் வைத்திருக்கிற தண்ணீர் பந்தலைக் கண்டு, அப்படியே நீர் இன்னும் பல நற்காரியங்களையும் தர்மங்களையும் செய்திருக்கிறீர் என்பதை அறிந்தும் கேட்டும் உம்மீது மிகவும் மகிழ்ந்து இவ்விடம் வந்தோம்" என்றார். பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்திருக்கிற தண்ணீர் பந்தரில் உம்முடைய பெயரை எழுதாமல் வேறு யாரோ ஒருவருடைய பெயரை எழுதியதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் பொருட்டும் இங்கு வந்தேன்" என்றார்.
இதைக் கேட்ட அப்பூதி அடிகள் அப்பரை நோக்கி, "ஐயனே! பார்த்தால் நீர் நல்ல சிவனடியாராகத் தோன்றுகின்றீர். ஆனால் நீர் சொல்லிய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இல்லையே. பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவ மன்னன் செய்த இடையூறுகளையெல்லாம் சிவபக்தி எனும் பலத்தினாலே வென்று வெற்றிகண்ட திருநாவுக்கரசு சுவாமிகளின் திருப்பெயரை நான் எழுதிவைக்க, நீர் இதனைக் கொடுஞ்சொல்லால் பேசுகின்றீரே. கல்லால் ஆன தோணியைக் கொண்டு கடலைக் கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகில் அறியாதவர் எவரும் உண்டோ? நீர் சிவ வேடத்தோடு நின்று கொண்டு இவ்வார்த்தைகளைப் பேசியதால் உம்மைச் சும்மா விடுகிறேன். நீர் யார்? எங்கிருப்பவர். எங்கிருந்து வருகின்றீர்" என்றெல்லாம் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார்.
ஆட்கொள்ளப்பட்ட அடியார்
அப்பூதி அடிகள் கோபமாக அந்தப் பெரியவரிடம் பேச, அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த திருநாவுக்கரச சுவாமிகள் அமைதியாகச் சொன்னார், "அன்பரே! சமணப் படுகுழியில் விழுந்து அதிலிருந்து மேலேறும்படியாக பரமசிவனால் சூலை நோயைக் கொடுத்து ஆட்கொள்ளப்பட்ட உணர்வில்லாத சிறியேன் யான்" என்றார்.
அப்பூதி அடிகளுக்கு அதிர்ச்சி. தன் எதிரில் நின்று கொண்டு தான் கோபப்பட்டுப் பேசிய போதும் அன்பு பெருக்கெடுத்தோட, சற்றும் ஆணவமின்றி அடக்கத்தோடு தன்னை இன்னார் என்பதை அடையாளம் காட்டிடும் இவர்தானே திருநாவுக்கரசர் சுவாமிகள். இதை புரிந்து கொள்ள முடியாத மூடனாகிவிட்டேனே. அவர் கரங்கள் இரண்டும் தலைக்கு மேல் குவிந்தன. கண்கள் கண்ணீரை சொரிந்தன. பேச்சு தடுமாற, உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்க்கும்படியாக பூமியில் விழுந்து திருநாவுக்கரசர் சுவாமிகளின் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொண்டு தன் கண்ணீரால் கழுவினார். அப்பர் சுவாமிகள் அப்பூதியடிகளை எதிர் வணங்கி, அவரை அள்ளி எடுத்து அணைத்துக் கொள்ள அடிகளாரும் உளம் மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடினார். பாடினார், ஆடினார்; மகிழ்ச்சிப் பெருக்கால் தான் என்ன செய்கிறோம் என்பதைக் கூட மறந்தார். வீட்டினுள்ளே ஓடினார், அங்கு தன் மனைவி மக்கள் ஆகியோரிடம் திருநாவுக்கரசர் தங்கள் இல்லம் நோக்கி வந்துவிட்ட செய்தியைச் சொல்லி அவர்களையும் வாயிலுக்கு அழைத்து வந்து வணங்கச் செய்தார். அப்பரை உள்ளே அழைத்துச் சென்று உபசரிக்கத் தொடங்கினர். அவர் பாதங்களைக் கழுவி, பாதபூசை செய்து அந்தப் பாதோதகத்தைத் தங்கள் தலைகளில் புரோட்சித்துக் கொண்டார்கள்.
பின்பு திருநாவுக்கரசு சுவாமிகளை ஓர் ஆசனத்தில் அமர்த்தி, முறைப்படி அர்ச்சித்து பூசனைகள் புரிந்து "சுவாமி! தேவரீர் இன்று இவ்வீட்டில் திருவமுது செய்தருள வேண்டும்" என்று வேண்டிக் கொள்ள நாயனாரும் அதற்கு உடன்பட்டார்.
அப்பர் அமுதுண்ணல்
அப்பூதியடிகள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கிற திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு அறுசுவை விருந்து படைக்க தன் மனைவியைப் பணித்தார். அவரும் தங்கள் குலதெய்வமென மதிக்கும் அடியாருக்கு அடிசில் படைக்க ஓடியாடி பணிபுரிந்து அரியதொரு விருந்தினைத் தயாரித்தார். அடியார் அமர்ந்துண்ண ஒரு தலைவாழை இலை வேண்டுமே. தனது மூத்த மகனான திருநாவுக்கரசை அழைத்து வாழைத்தோட்டத்துக்குச் சென்று ஒரு பெரிய இலை கொண்டு வரப் பணித்தார். அந்தச் சிறுவனும் வீட்டிற்கு வந்திருக்கும் முக்கிய விருந்தாளி சிறப்பாக விருந்துண்ணும்படியான ஒரு பெரிய இலையை அறுக்க முயன்றான். அப்போது வாழைக் குறுத்துக்குள்ளிருந்து ஒரு நல்ல பாம்பு அவன் கையில் தீண்டிவிட்டது. தன் கையில் சுற்றிக் கொண்ட அந்தப் பாம்பை உதறி வீழ்த்திவிட்டுப் பதைபதைப்புடன் தன்னுடலில் ஏறும் விஷம் அவனை நினைவிழக்கச் செய்யும் முன்பாக இந்த இலையைக் கொண்டு போய் கொடுக்க வேண்டுமே என்று ஓடி கண்களும் உடலும் பற்களும் நஞ்சின் கொடுமையால் கருத்த நிறமாக மாற இலையைத் தாயார் கையில் கொடுத்துவிட்டு கீழே விழுந்து இறந்தான்.
பாம்பு கடித்த பாலகன்
தன் தனையனின் நிலைகண்டு பதறிய தந்தையும் தாயும், "ஐயகோ! என்ன இது. இப்படி நேர்ந்து விட்டதே. விருந்துண்ண வந்த இடத்தில் வீட்டு பாலகன் பாம்பு கொத்தி மரணமடைந்துவிட்டான் என்று தெரிந்தால் அடியார் அமுதுண்ண மாட்டாரே, என்ன செய்வோம், பரமேஸ்வரா" என்று கைகளைப் பிசைந்து கொண்டு நின்றனர். உடனே ஒரு பாயை எடுத்து அதில் உயிர் பிரிந்து கிடந்த மகனின் உடலைச் சுற்றி வீட்டின் முற்றத்தில் ஓர் மறைவான இடத்தில் வைத்துவிட்டனர். அதன் பின் அடியாரிடம் சென்று ஐயனே, எழுந்து வந்து அமுது செய்ய வேண்டும் என்றனர்.
அப்பர் சுவாமிகளும் எழுந்து கைகால்களைச் சுத்தி செய்து கொண்டு, வேறோர் ஆசனத்தில் அமர்ந்து அப்பூதி அடிகளாருக்கும், அவர் மனைவிக்கும் திருநீறு கொடுத்துவிட்டு, நான் திருநீறணியும் முன்பாக, திருநீறு பூசிக்கொள்ள உமது மகனையும் அழையுங்கள் என்றார் அப்பர். அதற்கு அப்பூதி அடிகள், "ஐயனே! அவன் இப்போது இங்கே வரமாட்டான்" என்றார்.
அப்பூதியடிகள் இப்படி பதில் சொன்னவுடன் மனத்தில் ஏதோவொரு ஐயம் ஏற்பட அப்பர் சுவாமிகள் அவரைப் பார்த்து "அவன் என்ன செய்கிறான்? ஏன் வரமாட்டான்? உண்மையைச் சொல்லுங்கள்" என்றார். இதைக் கேட்ட அப்பூதியடிகள் பயந்து, உடல் நடுக்குற்று, பெரியவரை வணங்கி நின்று நடந்த விவரங்களைச் சொன்னார். அதனைக் கேட்ட அப்பர் சுவாமிகள் "நீர் செய்தது சரியா? நன்றாயிருக்கிறதா? உங்கள் பிள்ளை இறந்தது கேட்ட வருந்தாமல் நான் சாப்பிட வேண்டுமென்று வருந்துகின்றீகளே! என்னே உங்கள் மன உறுதி. வேறு யாரால் இப்படிப் பட்ட சூழ்நிலையில் இப்படி நடந்து கொள்ள இயலும்?" என்று சொல்லிக் கொண்டே எங்கே உங்கள் மகனின் உடல் என்றார்.
பின்னர் சிறுவனின் உடலைக் கரங்களில் அள்ளிக் கொண்டு அப்பரும் அப்பூதியடிகளும் குடும்பத்தார் ஊராரும் அவர் பின் செல்ல அனைவரும் அவ்வூரிலிருந்த சிவாலயம் சென்றனர். அங்கு கொண்டு போய் சிறுவனின் உடலை இறைவன் முன் கிடத்திவிட்டு "ஒன்று கொலாம்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.
மாண்டவன் மீண்ட அதிசயம்
அப்படி அவர் அந்தத் திருப்பதிகத்தை சிவபெருமான் மீது பாடி முடிக்கவும் உடலில் ஏறிய நஞ்சு இறங்கி அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்து அப்பர் சுவாமிகளின் திருவடிகளில் வீழ்ந்தான். அப்பரும் அவனுக்குத் திருநீறு பூசி வாழ்த்தியருளினார். அப்பூதியடிகளுக்கும், அவர் மனைவியாருக்கும் தங்கள் மகன் உயிர் பிழைத்த மகிழ்ச்சிகூட இல்லாமல், நாயனார் உணவருந்தாமல் இருக்கின்றாரே என்று கவலையடைந்தார்கள்.
அப்பர் பெருமானும் அவர்களது உள்ளக்கிடக்கையை அறிந்து அவர்களோடு அவர்களது வீட்டுக்குச் சென்று அவர்கள் அனைவரோடும் உட்கார்ந்து திருவமுது செய்தார். சில நாட்கள் அவர்களோடு தங்கிய பின்னர் அவர் அங்கிருந்து திருப்பழனம் சென்றடைந்தார். சைவசமய குரவராகிய திருநாவுக்கரசர் சுவாமிகளின் திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெரும் செல்வம் என்று வாழ்ந்திருந்த அச்சிவனடியார் அப்பூதியடிகளின் வாழ்க்கைச் சரிதம் இது.
"ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்"
No comments:
Post a Comment