ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Sunday, July 11, 2010

பிரகலாதன்

பிரகலாதனை அழைத்தார், "குழந்தாய் பிரகலாதா! உன் தந்தை அளவில்லா ஆற்றலைப் பெற்றவர், அவ்ர் மிதித்தால் பூமியைச் சுமக்கும் ஆதிசேடன் தலை தளரும், நிமிர்ந்தால் தலை முடியால் அண்டத்தின் முகட்டை இடிப்பார், நடந்தால் பஞ்ச பூதங்களும் தனித்தனியாக விலகும். நீரிலும் சாகமாட்டார், நிலத்திலும் சாகமாட்டார், நெருப்பிலும் சாகமாட்டார், காற்றிலும் சாகமாட்டார், முனிவர்களின் கடும் சாபத்தினாலும் சாகமாட்டார், உள்ளேயும் சாகமாட்டார், வெளியேயும் சாகமாட்டார், தெய்வப் படைக்கலங்களாலும் சாகமாட்டார், இரவிலும் சாகமாட்டார், பகலிலும் சாகமாட்டார், யாராலும் அவர் உயிரைப் பறிக்க இயலாது. அப்படிப்பட்ட உன்னதமான வரத்தைப் பெற்ற இரணியனுக்குப் பிறந்த மகனாகிய நீயா இப்படிப் பிதற்றுவது" என்று பிரகலாதனை நோக்கிப் பதற்றத்துடன் கேட்டார்.

"குழந்தாய் பிரகலாதா உனதுகுரு நான் சொல்கிறேன் இரணியா நம! என்று சொல் பார்க்கலா" என்றார். பிரகலதன் குருவைப்பார்த்து சொன்னான்

ஓம் நமோ நாராயணாய என்று உரைத்துளம் உருகி
தானமைந்து இருதடங்கையும் தலை மிசைத்தாங்கி
பூநிறக்கண்கள் புனலுக மயிர்ப்புறம் பொடிப்ப
ஞான நாயகன் இருந்தனன்

"ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய" என்று உள்ளம் உருக கண்ணீர் பெருக இருகரம் கூப்பி உச்சரித்தது கண்டு அதிர்ந்தார். சண்டாமார்க்கர் செய்வதறியது திகைத்தார்.

"பிரகலாதா, நீ உரைத்தது என்ன?"

"இந்த உலகம் முழுவதும் ஓதத்த்க்க மந்திரத்தை" ஓதினேன் என்றான்.

சுக்கிரன் புதல்வர் சண்டாமார்க்கர் பதறியடித்துக் கொண்டு இரணியனிடம் ஓடினார். இவர் பதற்றத்துடன் ஓடிவருவதைக் கண்டு இரணியன் அதிர்ந்தான். அவரைப் பார்த்து "ஏன் இப்படி அலறியடித்துக்கொண்டு ஓடி வருகிறீர்?" என்றான்.

"தங்கள் மகன் பிரகலாதன் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபாடு கொண்டுள்ளான். இதனால் அளவற்ற வரங்களைப் பெற்ற தங்கள் புகழுக்கு இழுக்கு நேர்ந்து விடுமோ என்ற பயத்துடன் தங்களிடம் ஓடிவந்தேன்" என்றார். "அப்படியா? யாரங்கே? சேவர்களே, இங்கே வாருங்கள் விரைந்து சென்று என் மகன் பிரகலாத்னை அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான். வீரர்களும் அழைத்து வர விரைந்து ஓடினார்கள்.

பிரகலாதன் மிகவும் பவ்யமாக வந்து தந்தையை விழுந்து வணங்கினான். "மகனே! கல்விச் சாலையில் நீ ஆசானிடம் கற்ற பாடங்களையெல்லாம் ஒன்றுவிடாமல் எனக்குச் சொல் பார்க்கலாம்" என்றான்.

பிரகலாதன் "ஓம் இரணியாய நம்" என்று துவங்குவான் என்று எதிர்ப்பார்த்தான். ஆனால் பிரகலாதன் மாறாக "ஓம் நமோ நாராயணாய நம" என்று ஆரம்பித்தான். மேலும் தொடர்ந்து "எல்லா விருப்பங்களைத் தீர்ப்பதும் புண்ணிய பாவங்களைக் கடந்தும் வீடுபேறு தருவதும் வேள்வியின் பயன்களை அருள்வதும், அகில உலகத்திற்கும் காரணமாக விளங்கும் தனித்தலைவனின் நாமமே ஓம் நமோ நாராயணா என்னும் நாமமாகும்" என்றான்.

இரணியின் கண்கள் கோபத்தால் சிவந்தன். பற்களை நறநறவென கடித்தான் இடி இடிப்பது போல் பெருஞ் சிரிப்பு சிரித்தான். "பிரகலாதா! உனக்குப் புத்தி பேதலித்துவிட்டதா? எனது தம்பி இரண்யாட்சதனைக் கொன்றவன் பேரையா ஓதுகின்றாய்? இதுநாள் வரை இப்பெயர் சொன்ன நாவையும் கருதியமனத்தையும் சுட்டுப் பொசுக்கினேன். நீ எனது மகன் ஆனபடியால் பொறுத்துக்கொண்டேன். இந்தத் தீயமந்திரத்தை உனக்குச் சொல்லிக் கொடுத்தது யார்?" என்றான். மேலும் அவனை நோக்கி, "அறிவிலியே! பாம்பின் நாமத்தை எலி யோதுமா? பகைவன் பெயரை நீ பஎப்படி ஓதலாம்? நான் உயர்ந்தவனடா? அந்த அரி மிக மிகத் தாழ்ந்தவனடா. என் தம்பியை எதிர்க்கத் திராணியில்லாமல் கேவலம் பன்றி அவதாரம் எடுத்தவனடா அவன். அப்படிப் பட்ட கோழை நாராயணன், நாமத்தையா உச்சரிக்கிறாய்? குழந்தாய் பிரகலாதா, ஏதோ ஒரு இனம்புரியாத குழப்பத்தில் உளறுகிறாய் நீ. சீக்கிரம் திருந்தி உன்னை மாற்றிக்கொள். அண்ட கோள்ங்கள் அனைத்திற்கும் அதிபதியான உனது தந்தையாகிய என்பெயரை ஓது" என்றான்.

பிரகலாதன் "அப்பா, ஆதியென்னும் வேதமதில் விள்ங்குகின்ற அவன் எங்கே? நீ எங்கே? அரி நாமமென்னும் அமுதந் தன்னை நீதியோடு நீயும் உச்சரிக்க வேண்டும். இதுவே என் உறுதியான முடிவு" என்றான்.

இரணியன் அலவில்லாத சீற்றம் கொண்டான். "என்னிடம் தோன்றி வளர்ந்த இவனை விட வேறு கொடும்பகை எனக்கு இல்லை. பகைவனுக்கு அடிமையாகி சேவகம் செய்ய இவன் எனக்கே புத்தி சொல்கிறான். இனி இவன் உயிருடன் இருப்பதில் பலன் இல்லை. எனவே கொலைத் தொழிலில் வல்ல கொடியவர்களை அழைத்து வாருங்கள்" என்றான்.

அப்படியே ஆயிரக்கணக்கான கொலை பாதகர்கள் குழுமினார்கள். இரணியன் கட்டளளைப்படி அவனை அரண்மனை வாயிலுக்கு அப்பால் உள்ள ஒரு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். பிரகலாதனைத் தனித்து நிற்க வைத்து, சுற்றிலும் நின்று கொண்டு ஆயிரக்கணக்கான கொடுவாள்களை வீசினார்கள். என்ன ஆச்சர்யம்! அவன் மீது வீசப்பட்ட அத்தனை படைக்கருவிகளும் அவனை ஒன்றும் செய்யவில்லை. பரம்பொருளைத் துணையாகக் கொண்ட ஒருவனை அப்படித் துணைக்கொள்ளாதவர் திட்டிய சொற்கள் எப்படிப் பலிக்காமல் போகுமோ அப்படிப் போயின. கோடரிகள், கௌவாள்கள், ஈட்டிகள், வாள்கள், முள் தண்டாயுதங்கள் அனைத்தும் பலனறறுப் போயின.

இரணியன் கடும் சீற்றத்துடன் "அவனைத் தீயிலிட்டுப் பொசுக்குங்கள்" என்றான். அவ்வாறே செய்தனர். ஆனால் குளிர்ந்த சந்தனம் போன்ற உணர்வுடன் பிரகலாதன் இருந்தான்.

இரண்யன் மேலும் மேலும் கடுஞ்சீற்றத்துடன் அஷ்ட நாகங்களான ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், தனஞ்செயன், காளீயன், நாகபுராணன், புஞ்சன் ஆகிய நாகங்களைக் கொண்டு வந்து பிரகலாதனைக் கடிக்கச் செய்தான். அவைகள் பற்கள் கழன்று பிரகலாதன் மீது விஷத்திற்குப் பதில் அமுதம் சிந்தன.

மதயானைகளை விட்டு மிதிக்கச் சொன்னான். அவைகள் பிரகலாதனைக் கண்டு மிரண்டு ஓடின. அஷ்டதிக்கஜங்களைக் கொண்டு வரக் கட்டளையிட்டான். ஜராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம் ஆகிய யானைகள் வந்தன. அந்த அஷ்டதிக்கஜங்கள் பிர்கலாதனை வணங்கிவிட்டுத் திரும்பின.

இரணியன் கோபம் மீண்டும் மீண்டும் எல்லையில்லாமல் வளர்ந்தது. உயரமான மலையில் இருந்து அவனை கீழே வீசியெறியச் சொன்னான். பூமாதேவி பிரகலாதனை ஒர் கைக்குழந்தையைப் போல் ஏந்திக் கொண்டாள். கொடுமையான ஒரு பாறாங்கல்லில் கட்டிக் கடலில் துக்கி எறியச் சொன்னான் அந்தப் பெரும் பாறாங்கல் ஒரு படகுபோல் மிதந்து பிரகலாதனைக் காத்தது.

No comments: