ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Saturday, July 24, 2010

Swami Vivekananda

இவரை மறக்கலாமா?


இந்திய அரசு ஜனவரி 12ஐ தேசிய இளைஞர் தினமாக அறிவித்திருப்பது யாருக்காவது நினைவிலிருக்கிறதா என்று தெரியவில்லை, இந்திய அரசு உட்பட. 1863ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய இளைஞர்களுக்குப் பெரும் உத்வேகமாக விளங்கிய வீரத்துறவி விவேகானந்தர் பிறந்தார். அவருடைய சொல்லும் சிந்தனைகளும் ஒரு சூறாவளித் தாக்கத்தை மானுட குலத்தில் ஏற்படுத்தின. ஆனால் இப்போதிருக்கும் ‘மதச்சார்பற்ற அரசியல்’ விவேகானந்தரை மறப்பதில் லாபம் காண்கிறது. என் கண்ணில் பட்ட நாட்காட்டிகளில்கூட விவேகானந்தர் பிறந்த தினம், அல்லது தேசிய இளைஞர் தினம் என்ற குறிப்பு இல்லை. இளைஞர் தினம் என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால் வாட்டிகன் கத்தோலிக்க இளைஞர்களுக்காக அறிவித்த பன்னாட்டு இளைஞர் தினம் கிடைக்கலாம். ஐ.நா. சபை ஆகஸ்டு 12ஐப் பன்னாட்டு இளைஞர் தினமாக அறிவித்தது கிடைக்கலாம். ஆனால், பாரத தேசத்தை உலக அரங்கில் தலைநிமிர்ந்து பீடுநடை போடச் செய்த விவேகானந்தரைப் பற்றி எதுவும் கிடைக்கவில்லை.

எந்தச் சினிமா நடிகரோ நடிகையோ வந்து விவேகானந்தரைப் பற்றித் தமது மேலான கருத்துக்களை வாரி வழங்க இயலாதென்பதால் டி.வி. நிகழ்ச்சிகளும் கண்ணில் படவில்லை.

நாம் மறந்துவிட்டோம். நமக்கு நல்லது செய்பவர்களைச் சுத்தமாக மறந்து விடுகிறோம். நமக்குத் தீமைசெய்வதையே தமது முழுநேரப் பணியாகக் கொண்டு, அதன்மூலம் சம்பாதிக்கிறவர்களை நாம் விழுந்து விழுந்து கொண்டாடுகிறோம்.

தமிழ் இந்துவால் எப்படி மறக்க முடியும்? இந்த தேசத்தின் வரலாறு, கலாசாரம், வேதாந்தம், சித்தாந்தம், இலக்கியம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவரும், இசையிலும் கவிதையிலும் தேர்ந்தவரும், இந்த தேசத்து மக்கள் தாழ்ந்து அடிமைத்தனத்தில் கிடக்கும்வரை தனக்கு மோட்சம் கிடைத்தாலும் வேண்டாம் என்று கூறியவருமான அந்த இணையற்ற மகானை எப்படி மறக்க முடியும்!

விவேகானந்தர் 1891ல் ஆல்வார் நகர இளைஞர்களுடன் பேசும்போது கூறினார்:

“நுண்மையாகக் கற்றுக்கொள்ளுங்கள். படியுங்கள், உழையுங்கள் - சரியான நேரம் வரும்போது நமது வரலாற்றை அறிவியல் பூர்வமாக எழுதலாம். பாரதத்தின் வரலாறு இன்று குழம்பிக் கிடக்கிறது. காலவரிசைப்படிச் சரியாகச் சொல்லப்படவில்லை. நமது வீழ்ச்சியைப் பற்றியே பேசும் ஆங்கில எழுத்தாளர்களால் எழுதப்பட்ட வரலாறு நம் மனதை வலுவிழக்கச் செய்வதாகத்தான் இருக்கும். நமது பழக்கவழக்கங்களையும், சமயத்தையும், தத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியாத அந்நியர்கள் எப்படி மெய்யான, நடுவுநிலைமையான வரலாற்றை எழுதமுடியும்?”

ஆனால், இந்தியர்களே கற்றுத் தேர்ந்து இந்திய வரலாற்றை எழுதுகிற நிலைமை வந்தபோது முழுவதுமாக மேனாட்டுக் கல்வியால் மூளை மழுங்கிப் போய்விட்டனர் என்று தோன்றுகிறது. இந்தியம், இந்துமதம் எல்லாவற்றையும் கீழே போட்டுத் தரையில் மிதிப்பதுதான் சரித்திர மறுவாசிப்பு என்கிற முற்றடிமை நிலைக்குப் போய்விட்டார்கள். அப்படி எழுதுகிறவர்களுக்குத்தான் பன்னாட்டு விருதுகள் தேடி வருகின்றன. உண்மை பேசுகிறவர்கள் அவமதிக்கப் படுகிறார்கள்.

விவேகானந்தர் எப்படிப்பட்டவர் என்பதைச் சில சம்பவங்கள் வழியே இந்த நல்ல நாளில் நினைவு கூருவோம்:

சொல்லும் செயலும் மாறுபடாத சன்னியாசி

ஆகஸ்ட் 1888. சுவாமி ஆக்ராவிலிருந்து நடந்தே பிருந்தாவனத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பிருந்தாவனம் வரப்போகிறது. ஒரு மனிதர் புகையிலையை ‘சில்லம்’ எனப்படும் மண்ணாற் செய்த புகைபிடிப்பானில் அடைத்துப் பிடிப்பதைப் பார்க்கிறார். (அந்தச் சமயத்தில் புகைபிடிப்பதைப் பற்றிய இத்தனை விழிப்புணர்வு இருந்ததாகத் தெரியவில்லை. எல்லா வட இந்தியக் குடும்பங்களும் ஹூக்கா, சில்லம் அல்லது பைப் இவற்றிலே புகையிலையை அடைத்துப் புகைப்பது மிகச் சாதாரணமாக இருந்தது புத்தகங்களில் தெரியவருகிறது. ஆங்கிலேயர்கள் விருந்துக்குப் பின் பெண்களானால் காப்பி குடிக்கவும், ஆண்களானால் ‘புகைக்கும் அறை’க்கும் செல்வார்கள் என்று அக்காலத்தியப் புதினங்கள் பேசுகின்றன.)

நடந்து களைத்த தனக்கு ஒரு இழுப்பு நல்லது செய்யும் என நினைக்கிறார். “அதைக் கொடுப்பீர்களானால், ஒரு முறை புகையை இழுத்துவிட்டுத் தருகிறேன்” என்றார் துறவி. சில்லம் வைத்திருந்தவர் பின்னுக்கிழுத்துக் கொள்கிறார். “நான் மாட்டேன். இதைக் கொடுப்பதன்மூலம் உங்களை நான் அசுத்தப் படுத்திவிடுவேன். நான் ஒரு தெருக்கூட்டும் தொழிலாளி” என்றார். சுவாமி அங்கிருந்து நகர்ந்தார்.

“என்ன! நான் ஒரு சன்னியாசி. சாதி, குடும்பம், கவுரவம் என்னும் எண்ணங்களைத் துறந்தவன். இருந்தாலும் நான் ‘தோட்டி’ என்றதும் தயங்கினேன். என்னால் அந்தக் குழாயில் புகைபிடிக்க முடியவில்லை. நெடுங்காலப் பழக்கத்தின் அடிமைத்தனம்தான் என்ன!” இந்த எண்ணம் அவரைத் துன்புறுத்தியது.

திரும்பி வந்து அவரருகிலேயே அமர்ந்துகொண்டார். “சகோதரா! ஒரு குழாய் புகையிலை எனக்குக் கொடு” என்றார். “ஐயா, நீங்களோ துறவி. நானோ தீண்டத்தகாதவன்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார் அந்தத் துப்புரவுத் தொழிலாளி. சுவாமியா அதைக் கேட்பவர், விடவேயில்லை.

நெடுநாட்களுக்குப் பின் இதை கிரிஷ்சந்திர கோஷ் என்ற நண்பருக்குச் சொன்னபோது அவர் சொன்னார் “நீ புகையிலைக்கு அடிமை. ஆகவே ஒரு தோட்டியிடம் கெஞ்சிக் கூத்தாடிப் புகைபிடித்தாய்”. “இல்லை கிரீஷ், என்னை நான் சோதித்துக்கொள்ள விரும்பினேன். சன்னியாசத்துக்குப் பின் ஒருவன் தன்னைத் தானே ‘நான் நிறத்துக்கும் சாதிக்கும் அப்பால் தாண்டிப் போய்விட்டேனா?’ என்று சோதித்துக்கொள்வது அவசியம். சன்னியாசத்தின் உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பது கடினம்: சொற்களுக்கும் செயலுக்கும் நடுவே மாறுபாடு இருக்கக் கூடாது” என்றார்.

பின்னொருமுறை ஒரு சீடரிடம் பேசிக்கொண்டிருந்த போது சுவாமி சொன்னார்: “சன்னியாசத்தின் லட்சியங்களைக் கடைப்பிடிப்பது எளிதென்று நினைக்கிறாயா மகனே? வாழ்வில் இதைவிடக் கடினப் பாதை வேறெதுவும் இல்லை. சிறிது வழுக்கினாலும் அதல பாதாளத்தில் விழுவாய். அந்தச் (தோட்டியிடம் புகைபிடித்த) சம்பவம் ‘யாரையும் வெறுக்காதே, எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தாம்’ என்ற பெரிய பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தது”

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

என்பது உண்மையிலேயே துறவுநெறி பூண்டு, அதில் நிலைபெற்றோருக்கே இயல்வதாக இருக்கிறது. மற்ற எல்லாரும் ஏதோ ஒரு வகையில் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டுவிடுகிறோம் அல்லவா?

இந்தியாவின் ஆன்மீகப் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்து வாரி வழங்கிய அந்த வள்ளலுக்குத் தோட்டியும் ஒன்றே, கோடீஸ்வரனும் ஒன்றே.

ராக்ஃபெல்லரின் முதல் நன்கொடை

1894ன் ஆரம்பப் பகுதி. சிகாகோவில் விவேகானந்தர் தங்கியிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் இல்லத்தரசர் ஏதோ வகையில் ஜான் டி. ராக்ஃபெல்லருடன் தொழில்வகைத் தொடர்பு கொண்டவர். அவரும் பிற நண்பர்களும் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அற்புத சன்யாசி பற்றிப் பலமுறை கூறி அவரை அழைத்தும், ராக்ஃபெல்லர் பிடிவாதமாக வர மறுத்துவிட்டார்.

ராக்ஃபெல்லர் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இன்னும் பிரபலமடையவில்லை. ஆனால் செல்வாக்குள்ளவர், திண்ணமானவர், கையாளக் கடினமானவர், யாருடைய அறிவுரைகளையும் கேட்காதவர் என்றெல்லாம் பேர்வாங்கியிருந்தார்.

சுவாமியைச் சந்திக்க விரும்பாவிட்டாலும் ஒரு நாள் ஏதோ ஒரு உந்துதலில், திடீரென நண்பரின் வீட்டுக்குள் நுழைந்து, “ஹிந்து சாமியாரைப் பார்க்கணும்” என்று பட்லரிடம் சொன்னார். பட்லர் வரவேற்பறையில் அழைத்துக்கொண்டு போனார். அதற்குள் மளமளவென்று இவர் விவேகானந்தர் இருந்த படிப்பறைக்குள் சென்றார். அங்கே மேசையருகில் அமர்ந்திருந்த சுவாமி நிமிர்ந்துகூடப் பார்க்காதது இவருக்கு வியப்பளித்திருக்க வேண்டும்.

சற்று நேரத்துக்குப் பின் சுவாமி ராக்ஃபெல்லரின் வாழ்வில் நடந்த, வேறு யாரும் அறிந்திருக்க முடியாத சில விஷயங்களைச் சொன்னார். “உன் செல்வம் உனக்கே உரியது என்று நினைத்துவிடாதே. நீ ஒரு வழங்கு குழாய்தான். உனது கடமை உலகுக்கு நன்மை செய்தல். கடவுள் அதற்கு ஒரு வாய்ப்பை இந்தச் செல்வத்தின் மூலம் அளித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள். மக்களுக்கு நன்மை செய்”.

(சுவாமி தனக்கு நன்கொடை கொடு என்று யாரையும் கேட்டது கிடையாது. தான் பேச்சுக்கள் மூலம் ஈட்டியதை அமெரிக்கத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்ததும் உண்டு. ஒருமுறை பால்டிமோரில் வ்ரூமன் சகோதரர்கள் துவங்கத் திட்டமிட்டிருந்த ஒரு பன்னாட்டுப் பல்கலைக் கழகத்துக்கு அவ்வூரில் பேசியதில் வந்த பணத்தை வழங்கினார்.)

ராக்ஃபெல்லருக்கு எரிச்சல் வந்தது. இந்தப் பாணியில் யாரும் இதுவரை அவரிடம் பேசமுனைந்ததோ, இன்னது செய் அன்று உபதேசித்ததோ கிடையாது. ‘போய்வருகிறேன்’ என்று கூடச் சொல்லாமல் வெளியே நடந்தார் ராக்ஃபெல்லர்.

ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் அங்கு வந்து சுவாமியை அதே அறையில் பார்த்தார். ஒரு அமெரிக்கப் பொது நிறுவனத்துக்குப் பெரிய தொகையை வழங்குவதற்கான திட்டம் குறித்த ஒரு ஆவணத்தை சுவாமியின் மேசைமேல் வைத்தார். “இப்போது உங்களுக்குத் திருப்தியாக இருக்கவேண்டுமே, எனக்கு நன்றி சொல்லவேண்டும் நீங்கள்” என்றார் ராக்ஃபெல்லர்.

சுவாமி அசையவோ, கண்களை உயர்த்தவோ இல்லை. அந்தத் தாளை எடுத்துப் பார்த்துவிட்டு “நீயல்லவா எனக்கு நன்றி செலுத்தவேண்டும்” என்றார். பொதுநலப் பணிக்கு ராக்ஃபெல்லர் கொடுத்த முதல் நன்கொடை அதுதான்.

மரம்பழுத்தால் வௌவாலை வாஎன்று கூவி
இரந்து அழைப்பார் யாவரும் அங்கு இல்லை - சுரந்துஅமுதம்
கற்றா தரல் போல கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்

(நல்வழி, ஔவையார், பாடல்: 29)

உலகத்தவர் தம்மவர் ஆகவேண்டும் என்று எண்ணுகிறவர் எப்படிப் பசு தன் கன்றுக்கு மறைத்துவைக்காமல் பால் தருகிறதோ அதே அன்போடு தம் செல்வத்தைத் தரவேண்டுமாம். செல்வமுடையவருக்கு அவ்வெண்ணம் வராத போது நினைவூட்டுதல் தன்னலமற்ற துறவியரின் பணியாக இருந்திருக்கிறது.

No comments: