ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Thursday, August 12, 2010

பகவத் கீதை

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!...
மரணத்தின் தன்மை சொல்வேன்!...
மானிடர் ஆன்மா மரணம் எய்தாது...
மறுபடிப் பிறந்திருக்கும்!...
மேனியைக் கொல்வாய்...மேனியைக் கொல்வாய்...
வீரத்தில் அதுவும் ஒன்று!
நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி,
சென்று தான் தீரும் ஓர் நாள்...

(கண்ணா, உனக்கு எல்லாம் தெரியும், ஆனால் எனக்கு உன்னைத் தான் தெரியும், பரந்தாமனைத் தான் தெரியும்! நீயா என்னை இந்தப் பாவச் செயலுக்குத் தூண்டுவது?)

என்னை அறிந்தாய், எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்!
கண்ணன் மனது கல் மனதென்றோ...
காண்டீபம் நழுவ விட்டாய்,
காண்டீபம் நழுவ விட்டாய்!
மன்னரும் நானே, மக்களும் நானே,
மரஞ் செடி கொடியும் நானே...
சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்...
துணிந்து நில், தர்மம் வாழ்க!

(ஆனால் கொல்லப் போகிறவன் நான் அல்லவா? அந்தப் பழியெல்லாம் எனக்கல்லவா? கண்ணன் காட்டிய வழி என்று நீ எண்ணியதை நான் செய்து விட்டால், அதனால் வரும் பாவ பலனை யார் சுமப்பது? இந்தக் கொலைக்கு நீ உடந்தை ஆவாயா? சொல், சொல்!)
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!...
போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்,
போகட்டும் கண்ணனுக்கே!...
கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான்,
கண்ணனே கொலை செய்கின்றான்!...
காண்டீபம் எழுக, நின் கைவண்ணம் எழுக,
இக் களமெலாம் சிவக்க, வாழ்க! ஆஆஆஆஆ...


பகவத் கீதை - பாரதியாரின் முன்னுரை (பாகம் 8 & 12)
(வடமொழிச் சொற்கள் நீக்கி சில பகுதிகள் மட்டும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன! பின் வருவன பாரதியாரின் வரிகள்...)

பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள்.
துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டன. ஆதலால்,இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூல் என்று சிலர் பேசுகிறார்கள்.

கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும், இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவது என்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.

துரியோதனாதியர் காமக் குரோதங்கள்.
அர்ஜுனன் ஜீவாத்மா.
ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.
இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.

இந்நூல் ஞான சாஸ்திர்களில் முதன்மைப் பட்டிருப்பதுபோல், காவிய வரிசையிலும் மிக உயர்ந்ததென்பதற்குச் சான்றாகும்.
ஆனால், அதிலிருந்து இது ஞான சாஸ்திரமேயில்லை என்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.

முகவுரையில் மாத்திரமன்றே?
நூலில், நடுவிலும் இடையிடையே, 'ஆதலால், பாரதா, போர் செய்', என்ற பல்லவி வந்துகொண்டே இருக்கின்றது அன்றோ? என்று கூறிச் சிலர் ஆட்சேபிக்கலாம்.

அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துச் சொன்னேன்.
அதனை, இங்கு மீண்டும் சொல்லுகிறேன்.
துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள்.
அர்ஜுனன் ஜீவாத்மா.
ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா

இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் 'common sense' என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும்.

சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம்.
சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொது என்று விளங்குகிறது.

ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள்.
சாதாரண ஞானத்தின்படி நடக்க ஒட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன.
சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில்,
நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால்,
நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்' என்பது.

நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.

நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும்,
ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டும் இருப்போமாயின்
- அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை

No comments: