ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Wednesday, August 4, 2010

விருத்தகிரிஸ்வரர் விருத்தாம்பிகை

பழமலைநாதர் கோவில், திருமுதுகுன்றம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர் திருமுதுகுன்றம்
இறைவன் பெயர் பழமலைநாதர், விருத்தகிரிஸ்வரர்
இறைவி பெயர் பெரியநாயகி, விருத்தாம்பிகை
பதிகம் திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 7
சுந்தரர் - 3
எப்படிப் போவது தேவாரப் பாடல்களில் திருமுதுகுன்றம் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது.

அருள்மிகு
பழமலைநாதர் திருக்கோவில்
விருத்தாசலம்
விருத்தாசலம் அஞ்சல்
கடலூர் மாவட்டம்
PIN - 606001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு: திருமுதுகுன்றத்தில் உள்ள சிவாலயம் 4 புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் 4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் காண்போரைக் கவரும் விதமாக நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. ஆலயத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஐந்து பிரகாரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம் இவ்வாலயத்தில் உள்ளன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது. முதல் வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. பாதாள விநாயகர் என்று அழைக்கப்படும் இவரை வணங்கினால் எல்லக் குறைகளும் நீங்கி நல்ல வாழ்வு அமையும் என்பதால் பக்தர்கள் இங்கு வந்து இவரை வணங்குகின்றனர். விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோவிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் நுழைந்தவுடன் தல விருட்சமான வன்னி மரம் உள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.

நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன.

ஆகமக் கோவில: சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் ஆறுமுருகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ளார்.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசிவிட்டு, திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள் செய்தார்.

தலத்தின் சிறப்பு: இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.

"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்."
(கந்தபுராணம் - வழிநடைப்படலம்)

ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது. இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.

காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பிரம்மோற்ஸவம் ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

No comments: