ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Friday, August 31, 2012

ஆட்கொள்ளப்பட்ட அப்பூதி அடிகள்

அப்பூதி அடிகள்

தனமாவது திருநாவுக்கரசின் சரணம் என்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்தி வைத்து ஆங்கு அவன் வண் தமிழ்க்கே
இனமாத் தனது பெயர் இடப் பெற்றவன் எங்கள் பிரான்
அனமார் வயல் திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே 
அப்பூதி அடிகள்

பொன்னி நதி வளம் பெருக்கும் சோழ வளநாட்டில் காவிரியின் வடகரையில் திருவையாற்றுக்குக் கிழக்கே மூன்று கல் தொலைவில் அமைந்துள்ள புண்ணியத் தலம் திங்களூர். இங்கு அறம் செழிக்க நற்செயல்கள் பல புரிந்து வாழ்ந்த அந்தண குலத்தோர் அப்பூதி அடிகள். இவர் பாவங்கள் அனைத்தையும் நீக்கியவர்; புண்ணியங்கள் அனைத்தையுமே தாங்கியவர். அத்தகையவர் திருமணம் செய்து கொண்டு திங்களூரில் தனது மனையாளொடும் வாழ்ந்து வந்தார். இந்த அந்தணக் குலத் தோன்றல் சிவ பக்தியில் ஆழ்ந்து திளைத்தவர். அடுத்தவர் துன்பம் தாங்காத உள்ளம் படைத்த இவர் ஓர் புண்ணியமூர்த்தி.

அப்பர் சுவாமிகள் மீதுற்ற பக்தி

இப்படி அறனும், வளமும் செழிக்க அற்புதமான இல்லற வாழ்க்கை வாழ்ந்து வந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசரைப் பற்றி கேள்வியுற்றார். இவரை அப்பர் என்றும் மக்கள் போற்றி வந்தார்களல்லவா? அத்தகைய மகா புண்ணியவானைக் கண்ணார தரிசிக்கவும், மனதார வணங்கி அவர்தம் ஆசியினைப் பெற்றிடவும் அனுதினமும் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவர் உள்ளத்தில் ஊற்றெடுத்த பக்தி ரசம், அப்பர் மேல் அவர் கொண்ட காதல், பக்தி, ஈடுபாடு, இவர் சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களுக்குமே "திருநாவுக்கரசு" என்றே பெயர் வைத்து, அப்பெயரை பலமுறை உச்சரிக்கும் பாக்கியம் பெற்றிருந்தார். வீட்டிலிருந்த படி, மரக்கால் இவைகளுக்கும் திருநாவுக்கரசுதான். பசுக்கள், எருமைகள் அனைத்துக்கும் அவர் பெயரேதான். அவ்வூரில் அவர் செல்வந்தராகையால் ஒரு மடம் கட்டி அதற்கும் திருநாவுக்கரசர் என்று பெயரிட்டார். வழிப்போக்கர்கள் தாகசாந்தி செய்து கொள்வதற்கென்று பல தண்ணீர்ப் பந்தல்களை நாட்டி வைத்தார். அவைகளுக்கும் திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் என்றே பெயரிட்டார். அவ்வூர் மக்களின் பயன்பட்டுக்காக அவர் எடுப்பித்த குளங்களுக்கும், நந்தவனங்களுக்கும் அதே பெயர் தான். என்ன இது? இப்படியொரு பக்தியா? தான் கண்ணால் கண்டிராத ஒரு சிவபக்தர், தலைசிறந்த மகான் அவர்மீது கொண்ட காதலால் அவர் செய்து வைத்த அத்தனைக்கும் அந்த மகானின் பெயரே வைத்தார் என்றால் அவரது பக்தியை என்னவென்று சொல்லிப் புகழ்வது?

நாவுக்கரசர் திங்களூர் வருகை

இப்படியிருக்கும் நாளில் திருநாவுக்கரசர் சுவாமிகள் பற்பல சிவத்தலங்களுக்கும் புண்ணிய யாத்திரை மேற்கொண்டு காவிரியின் கரையோடு வந்து கொண்டிருந்தார். அப்படி அவர் திங்களூரைக் கடந்து செல்கையில் அவர் கண்களில் பட்ட அனைத்து இடங்களிலும் "திருநாவுக்கரசு" என்ற தனது பெயர் இருக்கக் கண்டார். அப்படி அவர் திகைத்து ஒரு தண்ணீர் பந்தலருகில் நின்றிருந்த சமயம் அங்கிருந்தவரைப் பார்த்து, இந்தத் தண்ணீர் பந்தலுக்கும் மற்ற பல அறக்காரியங்களுக்கும் இவ்வூரில் "திருநாவுக்கரசு" என்று பெயரிடப்பட்டிருப்பதன் காரணத்தை வினவினர். அதற்கு அந்த மனிதர் இவ்வூரில் அப்பூதி அடிகள் என்றொரு சிவபக்தர் இருக்கிறார். அவர் இந்தத் தண்ணீர் பந்தலுக்கு மட்டுமல்ல, அவர் செய்திருக்கிற அனைத்து தர்ம காரியங்களுக்கும் அதாவது அவர் கட்டிய சத்திரம், கிணறுகள், நந்தவனம், குளம் எல்லாவற்றுக்கும் திருநாவுக்கரசு என்றுதான் பெயரிட்டிருக்கிறார் என்று கூறினார்.

இப்படி அவர் சொன்னதைக் கேட்ட திருநாவுக்கரசு சுவாமிகள் திகைத்துப் போனார். இவர் ஏன் அப்படி எல்லா அறச்செயல்களுக்கும் திருநாவுக்கரசர் என்ற பெயரைச் சூட்டியிருக்கிறார், அப்படிப்பட்ட புண்ணியவான் எங்கே இருக்கிறார் என்று வினவினார். அதற்கு அந்த மனிதர், அப்பூதியடிகள் இதே ஊரைச் சேர்ந்தவர்தான். இந்நேரம் வரை இங்குதான் இருந்தார். இப்போதுதான் தன்னுடைய வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். அவர் வீடும் அதோ மிகச் சமீபத்தில்தான் இருக்கிறது என்றார் அவர்.

அப்பூதியார் இல்லத்தில்

உடனே திருநாவுக்கரசு சுவாமிகள் அப்பூதி அடிகளுடைய வீடு அமைந்திருக்கிற தெருவுக்குச் சென்று அவர் வீடு எது என்று விசாரித்து அந்த வீட்டின் வாயிலில் போய் நின்றார். அப்போதுதான் உள்ளே நுழைந்து கால்கைகளைச் சுத்தம் செய்துவிட்டுத் திரும்பிய அப்பூதியாரின் கண்களில் வாயிலில் வந்து நிற்கும் ஒரு முதிய சிவனடியார் பட்டுவிட்டார். உடனடியாக வாயிலுக்கு வந்து அங்கு நிற்கும் சிவனடியாரை வணங்கி திண்ணையில் அமரச் செய்தார். அப்பூதி அடிகளைக் கண்ட திருநாவுக்கரசரும் உளம் குளிர அந்த பெரியோனை வாழ்த்தி வணங்கினார்.

திண்ணையில் அமர்ந்த திருநாவுக்கரசரை அப்பூதியடிகள் "ஐயனே! தேவரீர் இவ்விடத்திற்கு எது குறித்து எழுந்தருளியிருக்கின்றீர்" என வினவினார். அதற்கு அப்பர் சுவாமிகள் சொன்னார், " அன்பரே! யான் திருப்பழனம் எனும் சிவத்தலத்தில் கோயில் கொண்டுள்ள எம் ஐயனை தரிசித்துவிட்டு வரும் வழியில் நீர் வைத்திருக்கிற தண்ணீர் பந்தலைக் கண்டு, அப்படியே நீர் இன்னும் பல நற்காரியங்களையும் தர்மங்களையும் செய்திருக்கிறீர் என்பதை அறிந்தும் கேட்டும் உம்மீது மிகவும் மகிழ்ந்து இவ்விடம் வந்தோம்" என்றார். பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்திருக்கிற தண்ணீர் பந்தரில் உம்முடைய பெயரை எழுதாமல் வேறு யாரோ ஒருவருடைய பெயரை எழுதியதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் பொருட்டும் இங்கு வந்தேன்" என்றார்.

இதைக் கேட்ட அப்பூதி அடிகள் அப்பரை நோக்கி, "ஐயனே! பார்த்தால் நீர் நல்ல சிவனடியாராகத் தோன்றுகின்றீர். ஆனால் நீர் சொல்லிய வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இல்லையே. பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவ மன்னன் செய்த இடையூறுகளையெல்லாம் சிவபக்தி எனும் பலத்தினாலே வென்று வெற்றிகண்ட திருநாவுக்கரசு சுவாமிகளின் திருப்பெயரை நான் எழுதிவைக்க, நீர் இதனைக் கொடுஞ்சொல்லால் பேசுகின்றீரே. கல்லால் ஆன தோணியைக் கொண்டு கடலைக் கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகில் அறியாதவர் எவரும் உண்டோ? நீர் சிவ வேடத்தோடு நின்று கொண்டு இவ்வார்த்தைகளைப் பேசியதால் உம்மைச் சும்மா விடுகிறேன். நீர் யார்? எங்கிருப்பவர். எங்கிருந்து வருகின்றீர்" என்றெல்லாம் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார்.

ஆட்கொள்ளப்பட்ட அடியார்

அப்பூதி அடிகள் கோபமாக அந்தப் பெரியவரிடம் பேச, அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த திருநாவுக்கரச சுவாமிகள் அமைதியாகச் சொன்னார், "அன்பரே! சமணப் படுகுழியில் விழுந்து அதிலிருந்து மேலேறும்படியாக பரமசிவனால் சூலை நோயைக் கொடுத்து ஆட்கொள்ளப்பட்ட உணர்வில்லாத சிறியேன் யான்" என்றார்.

அப்பூதி அடிகளுக்கு அதிர்ச்சி. தன் எதிரில் நின்று கொண்டு தான் கோபப்பட்டுப் பேசிய போதும் அன்பு பெருக்கெடுத்தோட, சற்றும் ஆணவமின்றி அடக்கத்தோடு தன்னை இன்னார் என்பதை அடையாளம் காட்டிடும் இவர்தானே திருநாவுக்கரசர் சுவாமிகள். இதை புரிந்து கொள்ள முடியாத மூடனாகிவிட்டேனே. அவர் கரங்கள் இரண்டும் தலைக்கு மேல் குவிந்தன. கண்கள் கண்ணீரை சொரிந்தன. பேச்சு தடுமாற, உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்க்கும்படியாக பூமியில் விழுந்து திருநாவுக்கரசர் சுவாமிகளின் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொண்டு தன் கண்ணீரால் கழுவினார். அப்பர் சுவாமிகள் அப்பூதியடிகளை எதிர் வணங்கி, அவரை அள்ளி எடுத்து அணைத்துக் கொள்ள அடிகளாரும் உளம் மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடினார். பாடினார், ஆடினார்; மகிழ்ச்சிப் பெருக்கால் தான் என்ன செய்கிறோம் என்பதைக் கூட மறந்தார். வீட்டினுள்ளே ஓடினார், அங்கு தன் மனைவி மக்கள் ஆகியோரிடம் திருநாவுக்கரசர் தங்கள் இல்லம் நோக்கி வந்துவிட்ட செய்தியைச் சொல்லி அவர்களையும் வாயிலுக்கு அழைத்து வந்து வணங்கச் செய்தார். அப்பரை உள்ளே அழைத்துச் சென்று உபசரிக்கத் தொடங்கினர். அவர் பாதங்களைக் கழுவி, பாதபூசை செய்து அந்தப் பாதோதகத்தைத் தங்கள் தலைகளில் புரோட்சித்துக் கொண்டார்கள்.

பின்பு திருநாவுக்கரசு சுவாமிகளை ஓர் ஆசனத்தில் அமர்த்தி, முறைப்படி அர்ச்சித்து பூசனைகள் புரிந்து "சுவாமி! தேவரீர் இன்று இவ்வீட்டில் திருவமுது செய்தருள வேண்டும்" என்று வேண்டிக் கொள்ள நாயனாரும் அதற்கு உடன்பட்டார்.

அப்பர் அமுதுண்ணல்

அப்பூதியடிகள் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கிற திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு அறுசுவை விருந்து படைக்க தன் மனைவியைப் பணித்தார். அவரும் தங்கள் குலதெய்வமென மதிக்கும் அடியாருக்கு அடிசில் படைக்க ஓடியாடி பணிபுரிந்து அரியதொரு விருந்தினைத் தயாரித்தார். அடியார் அமர்ந்துண்ண ஒரு தலைவாழை இலை வேண்டுமே. தனது மூத்த மகனான திருநாவுக்கரசை அழைத்து வாழைத்தோட்டத்துக்குச் சென்று ஒரு பெரிய இலை கொண்டு வரப் பணித்தார். அந்தச் சிறுவனும் வீட்டிற்கு வந்திருக்கும் முக்கிய விருந்தாளி சிறப்பாக விருந்துண்ணும்படியான ஒரு பெரிய இலையை அறுக்க முயன்றான். அப்போது வாழைக் குறுத்துக்குள்ளிருந்து ஒரு நல்ல பாம்பு அவன் கையில் தீண்டிவிட்டது. தன் கையில் சுற்றிக் கொண்ட அந்தப் பாம்பை உதறி வீழ்த்திவிட்டுப் பதைபதைப்புடன் தன்னுடலில் ஏறும் விஷம் அவனை நினைவிழக்கச் செய்யும் முன்பாக இந்த இலையைக் கொண்டு போய் கொடுக்க வேண்டுமே என்று ஓடி கண்களும் உடலும் பற்களும் நஞ்சின் கொடுமையால் கருத்த நிறமாக மாற இலையைத் தாயார் கையில் கொடுத்துவிட்டு கீழே விழுந்து இறந்தான்.

பாம்பு கடித்த பாலகன்

தன் தனையனின் நிலைகண்டு பதறிய தந்தையும் தாயும், "ஐயகோ! என்ன இது. இப்படி நேர்ந்து விட்டதே. விருந்துண்ண வந்த இடத்தில் வீட்டு பாலகன் பாம்பு கொத்தி மரணமடைந்துவிட்டான் என்று தெரிந்தால் அடியார் அமுதுண்ண மாட்டாரே, என்ன செய்வோம், பரமேஸ்வரா" என்று கைகளைப் பிசைந்து கொண்டு நின்றனர். உடனே ஒரு பாயை எடுத்து அதில் உயிர் பிரிந்து கிடந்த மகனின் உடலைச் சுற்றி வீட்டின் முற்றத்தில் ஓர் மறைவான இடத்தில் வைத்துவிட்டனர். அதன் பின் அடியாரிடம் சென்று ஐயனே, எழுந்து வந்து அமுது செய்ய வேண்டும் என்றனர்.

அப்பர் சுவாமிகளும் எழுந்து கைகால்களைச் சுத்தி செய்து கொண்டு, வேறோர் ஆசனத்தில் அமர்ந்து அப்பூதி அடிகளாருக்கும், அவர் மனைவிக்கும் திருநீறு கொடுத்துவிட்டு, நான் திருநீறணியும் முன்பாக, திருநீறு பூசிக்கொள்ள உமது மகனையும் அழையுங்கள் என்றார் அப்பர். அதற்கு அப்பூதி அடிகள், "ஐயனே! அவன் இப்போது இங்கே வரமாட்டான்" என்றார்.

அப்பூதியடிகள் இப்படி பதில் சொன்னவுடன் மனத்தில் ஏதோவொரு ஐயம் ஏற்பட அப்பர் சுவாமிகள் அவரைப் பார்த்து "அவன் என்ன செய்கிறான்? ஏன் வரமாட்டான்? உண்மையைச் சொல்லுங்கள்" என்றார். இதைக் கேட்ட அப்பூதியடிகள் பயந்து, உடல் நடுக்குற்று, பெரியவரை வணங்கி நின்று நடந்த விவரங்களைச் சொன்னார். அதனைக் கேட்ட அப்பர் சுவாமிகள் "நீர் செய்தது சரியா? நன்றாயிருக்கிறதா? உங்கள் பிள்ளை இறந்தது கேட்ட வருந்தாமல் நான் சாப்பிட வேண்டுமென்று வருந்துகின்றீகளே! என்னே உங்கள் மன உறுதி. வேறு யாரால் இப்படிப் பட்ட சூழ்நிலையில் இப்படி நடந்து கொள்ள இயலும்?" என்று சொல்லிக் கொண்டே எங்கே உங்கள் மகனின் உடல் என்றார்.

பின்னர் சிறுவனின் உடலைக் கரங்களில் அள்ளிக் கொண்டு அப்பரும் அப்பூதியடிகளும் குடும்பத்தார் ஊராரும் அவர் பின் செல்ல அனைவரும் அவ்வூரிலிருந்த சிவாலயம் சென்றனர். அங்கு கொண்டு போய் சிறுவனின் உடலை இறைவன் முன் கிடத்திவிட்டு "ஒன்று கொலாம்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.

மாண்டவன் மீண்ட அதிசயம்

அப்படி அவர் அந்தத் திருப்பதிகத்தை சிவபெருமான் மீது பாடி முடிக்கவும் உடலில் ஏறிய நஞ்சு இறங்கி அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்து அப்பர் சுவாமிகளின் திருவடிகளில் வீழ்ந்தான். அப்பரும் அவனுக்குத் திருநீறு பூசி வாழ்த்தியருளினார். அப்பூதியடிகளுக்கும், அவர் மனைவியாருக்கும் தங்கள் மகன் உயிர் பிழைத்த மகிழ்ச்சிகூட இல்லாமல், நாயனார் உணவருந்தாமல் இருக்கின்றாரே என்று கவலையடைந்தார்கள்.

அப்பர் பெருமானும் அவர்களது உள்ளக்கிடக்கையை அறிந்து அவர்களோடு அவர்களது வீட்டுக்குச் சென்று அவர்கள் அனைவரோடும் உட்கார்ந்து திருவமுது செய்தார். சில நாட்கள் அவர்களோடு தங்கிய பின்னர் அவர் அங்கிருந்து திருப்பழனம் சென்றடைந்தார். சைவசமய குரவராகிய திருநாவுக்கரசர் சுவாமிகளின் திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெரும் செல்வம் என்று வாழ்ந்திருந்த அச்சிவனடியார் அப்பூதியடிகளின் வாழ்க்கைச் சரிதம் இது.

"ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்"

Wednesday, August 29, 2012

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.
அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.
இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.
அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.
சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.
அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.
அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.
ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.
அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.
விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.
அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.
அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.
விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?
அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.
பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.
அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.
அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.
உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.
பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.
பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.
வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.
இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் நிறையும்.

சனிக்கிழமை விரதம்

பணமில்லாமல் இவ்வுலகம் இல்லை. பணமிருந்தால் மட்டும் போதுமா? அதை அனுபவிக்க போதிய ஆயுளும், ஆரோக்கியமும் வேண்டும். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருகிறது சனிக்கிழமை விரதம்.
நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று. இந்த விரதத்தை அனுஷ்டிக்க பெரிய அளவுக்கு காசு, பணம் தேவையில்லை. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள்.
இதை, ஒரு சம்பவம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. எனவே, பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார்.
இவ்வூரின் அருகிலுள்ள கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்தார். இவர், சீனிவாசனின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார். ஆனால், இதற்கு பலனாக, “மிக உயர்ந்த செல்வம்…’ வேண்டும் என, அவர் பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார். அது என்ன தெரியுமா? பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக வசிக்க வேண்டும் என்பது தான்.
இவர் தினமும் மண்பாண்டம் செய்வார் அல்லவா… பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்க மாட்டார். அந்த மண்ணைக் கொண்டு சிறு, சிறு பூக்கள் செய்வார். திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு,”ஏடுகுண்டல வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, பத்மநாபா, சீனிவாசா…’ என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களை தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார்.
அப்போது, திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தான் தொண்டைமான் எனும் மன்னன். அவன் ஒருநாள் ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றான். பெருமாளுக்கு தூவுவதற்காக அவன் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தான். அங்கு போய் பார்த்த போது, மண்பூக்களாகக் கிடந்தன. தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ என சந்தேகப்பட்டான். எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டான்.
மறுநாள் அவன் சன்னிதிக்கு வந்தான். அப்போதும், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்தன. குழம்பிப் போன அவனது கனவில், சீனிவாசன் தோன்றினார். “மன்னா… பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்ககளால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும், மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன…’ என்றார்.
மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றான் மன்னன் . அவர், பெருமாளின் மண்சிலைக்கு மண் பூக்களைத் தூவிக் கொண்டிருந்தார். “எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்துப் பூக்கள் கூட கிடைக்கவில்லையா?’ என்றான்.
“அரசே… நான் பரம ஏழை. இந்த வேலையை விட்டு, விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில் தவிக்கும். அதனால் தான், என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன். மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும் தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்…’ என்றார்.
இதைக் கேட்ட தொண்டைமான் மனம் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு பணம் கொடுத்தான். ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக் குயவர். நிஜ பக்திக்கு <உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார். இதனால் தான், இப்போதும் திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.

ஐயனின் பதினெட்டுப் படிகள்

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.
18 படி தெய்வங்கள்
ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.
1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது
பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?
முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.
இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.
மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.
நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.
ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.
எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.
ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உ<ணர்வது ஒன்பதாம் படி.
பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.
பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.
பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.
பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.
பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.
பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

Wednesday, April 11, 2012

திருமுதுகுன்றம் பழமலைநாதர்













































நமசிவாயஎன்ற மந்திரத்திற்கு ஐந்தெழுத்து. இதுபோல், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தீர்த்தம், கொடிமரம், நந்தி, கோபுரம், பிரகாரம், தேர் என எல்லாமே ஐந்து தான்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இத்தலம் பழமலைஎன்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் விருத்தாசலம்என்ற சொல்லால் அழைக்கப்பட்டது. “விருத்தம்என்றால் பழமை.” “அசலம்என்றால் மலை.” காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை. தேவாரத்திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான் தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.
இத்தலம் முன்பொரு காலத்தில் குன்றாக இருந்ததாம். விபசித்து முனிவர் முத்தா நதியில் நீராடி, இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று, திருப்பணி செய்யும் பேறு பெற்றார். இத்திருக்கோயிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோயிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்கினார். அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்பது வாய்வழிக்கதை. இந்த வன்னிமரம் 1700 ஆண்டுகளுக்கு முன்பானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒருமுறை, சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய, பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார். இத்தலம் வரும் போது இறைவன் சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னைத் தந்தார். திருவாரூர் செல்லும் வழியில் கள்வருக்கு பயந்து, இந்த பொன் அனைத்தையும் இங்குள்ள மணிமுத்தார்று நதியில் போட்டு விட்டு இறைவனின் அருளால் திருவாரூர் குளத்தில் மூழ்கி எடுத்தார். இதை அடிப்படையாகக் கொண்டே, “ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது போல்என்ற பழமொழி தோன்றியது.
28 லிங்கங்கள்: சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 இலிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த இலிங்கங்கள் கோயிலின் வடமேற்குப் பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள இலிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள இலிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.
28 ஆகமங்களுக்குரிய பெயர்களான காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், இரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், இலலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.
இக்கோயிலில் எல்லாமே ஐந்து தான்.
ஐந்து மூர்த்தங்கள்: விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்.
இறைவனின் ஐந்து திருநாமம்: விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி.
ஐந்து விநாயகர்: ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி.
இறைவனை தரிசனம் கண்டவர்கள்: உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.
ஐந்து கோபுரம்: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.
ஐந்து பிரகாரம் (திருச்சுற்று): தேரோடும் திருச்சுற்று, கைலாய திருச்சுற்று, வன்னியடித் திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ணத் திருச்சுற்று.
ஐந்து நந்தி: இந்த நந்திகளுக்கு இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று பெயர்.
ஐந்து உள் மண்டபம்: அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம்.
ஐந்து வெளி மண்டபம்: இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம்.
ஐந்து வழிபாடு: திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த ஜாமம்.
ஐந்து திருவிழா: வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பிரம்மோற்ஸவம்.
ஐந்து தேர்: விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர், பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர்.
தலத்தின் ஐந்து பெயர்: திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது. தல விருட்சம் வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம். காளஹஸ்தியில் உள்ளது போல, இங்குள்ள விநாயகர் 18 படியிறங்கிச் சென்று தரிசிக்கும்படி அமர்ந்துள்ளார். இந்த ஆழத்து விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று. தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.
இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 4 வேதங்களே 4 தூண்களாக அமைந்துள்ளன.
இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கிவிடுவதாக தல புராணம் சொல்கிறது.
பெரியநாயகியம்மை பதிகம், க்ஷத்திரக்கோவை வெண்பா, பழமலை நாதர் அந்தாதி, பெரியநாயகி விருத்தம், கலித்தொகை, பிக்ஷாடன நவமணி மாலை, குருதரிசனப்பதிகம், பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களும் இத்தலத்திற்குரியது.
கர்நாடக மன்னன் இத்தலம் வந்த போது பசியால் வாடினான். அப்போது பெரியநாயகி இளமை வடிவெடுத்து பாலூட்டி அவனுக்கு குமார தேவர் என்று பெயர் சூட்டினாள்.
தேவாரப்பதிகம்:
ஆடிஅசைந்து அடியாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருளெலாம் உமையாளுக்கோ மாட மதிலணி கோபுரம் மணி மண்டபம் மூடி முகில்தவழ் சோலை சூழ் முதுகுன்றரே.
-சுந்தரர்.
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 9 வது தலம்.
திருவிழா:
பிரம்மோற்சவம் - மாசி மாதம் - 10நாட்கள். 9 வது நாள் தேர்.
ஆடிப்பூரம் - 10நாட்கள் திருவிழா - அம்பாள் விசேசம் - திருக்கல்யாணம் - கொடி ஏற்றி அம்பாள் வீதி உலா.
வசந்த உற்சவம் - வைகாசி மாதம் -10 நாட்கள் திருவிழா.
ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், கந்தர் சஷ்டி, சூரசம்காரம் ஆகியவையும் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பெரியநாயகருக்கும்(உற்சவர்) சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது. பௌர்ணமி அம்மாவாசை மற்றும் பிரதோச நாட்களிலும் விசேடம்.
பிரார்த்தனை:
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. இத்தலத்து துர்க்கையம்மனை வழிபடுவோர்க்கு கல்யாண வரம் கைகூடப் பெறுகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. ஞாயிறு அன்று இராகு கால வேளையில் வடைமாலை சாத்தி இத்தலத்து பைரவரை வணங்கினால் அடுத்தடுத்து வரும் இடர்கள் துன்பங்கள் தூளாய்ப் போய்விடும்.
இத்தலத்து பெருமானை வழிபட்டால் இம்மைப்பயன்களும், மறுமைப்பயன்களும் கிடைக்கும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். முத்தாநதியில் நீராடினால் சித்தி பெறுவதுடன் முக்தியும் கிட்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன.

Tuesday, November 22, 2011

சிவாயநம


ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார்.
இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.
""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை. இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.
பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும். சிவாயநம என்பதை "சிவயநம' என்றே உச்சரிக்க வேண்டும். சி- சிவம்; வ- திருவருள், ய-ஆன்மா, ந-திரோதமலம், ம-ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்."சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்

சிவன் தோற்றமும் முடிவுமற்றவன்

சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். வட்ட வடிவத்துக்கு எது தொடக்கம், எது முடிவு? சிவலிங்கம் நீள்வட்ட வடிவமாக உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தின் சுழற்சியே நீள்வட்டப் பாதையில்தான் அமைகிறது. ‘லிம்’ என்பது உலக முடிவில், அண்ட சாரசரங்களும் லயிப்பதற்குரிய இடம். ‘கம்’ என்பது லயித்த பொருட்கள் அனைத்தும் அதிலிருந்தே வெளிப்படுவதைக் குறிப்பது. எனவே, அனைத்தும் சிவனிடமிருந்தே தோன்றி, சிவனிடமே ஓடுங்கி, மீண்டும் சிவனிட மிருந்தே வெளிப்படுகின்றன. அந்த ஆதிபரம் பொருளான சிவன் தோற்றமும் முடிவுமற்றவன் என்பதனையே ‘லிங்க வடிவம்’ குறிக்கிறது.

Friday, November 18, 2011

நம்பியாண்டார் நம்பி பொள்ளாப்பிள்ளையார்

களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.

இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். இங்குள்ள பொள்ளாப்பிள்ளையார் கோவில் மிகவும் பிரபலமானது. “பொள்ளா’ என்றால், உளியால் செதுக்கப்படாதது என்று பொருள்; அதாவது, தானாகவே தோன்றிய சுயம்பு விநாயகர் அவர்.

இந்த விநாயகருக்கு பூஜை செய்து வந்தார் நம்பியின் தந்தை; நம்பிக்கும் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுத் தார். ஒருநாள், அவர் தன் மனைவியுடன் வெளியூர் செல்ல இருந்ததால், மகனிடம், “இன்று, நீ போய் விநாயகருக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்து வா…’ என்றார்.

மகிழ்ச்சியடைந்த சிறுவன் நைவேத்திய பொருட்களுடன் கோவிலுக்குச் சென்றான். விநாயகரை வணங்கி நைவேத்யத் தைப் படைத்தான்.

“அப்பனே, விநாயகா! நான் சின்னஞ்சிறுவன். அப்பா ஊருக் குப் போய் விட்டார். உனக்கு தேங்காய், பழம், பொங்கல் கொண்டு வந்திருக்கிறேன். ஒன்று விடாமல் சாப்பிடு. குருகுலத்துக்கு கிளம்ப வேண்டும். தாமதமாகச் சென்றால், ஆசிரியர் கோபிப்பார். விரைவில் சாப்பிடப்பா…’ என்றான்.

பிள்ளையார் என்றாவது சாப்பிட்டதுண்டா?

அவர் கல்லாக அப்படியே உட்கார்ந்திருந்தார். பையனுக்கு அழுகை வந்தது…

“இதோ பார்! நீ மட்டும் இப்போது சாப்பிடாவிட்டால் இந்தத் தூணில் முட்டி மோதி இறப்பேன்…’ என்று சொல்லியபடியே, தூணில் முட்டி அழுதான்.

அவனது களங்கமற்ற பக்தி விநாயகரை ஈர்த்தது. அவர் சன்னதியில் இருந்து எழுந்து வந்து, அவனைத் தடுத்து நிறுத்தினார். தும்பிக்கையால் நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைக்க, காயம்பட்ட வடுவே மறைந்து விட்டது. நம்பியின் விருப்பப்படியே அத்தனை பொருட்களையும் ஒன்று விடாமல் சாப்பிட்டார்.

அவரிடம், “விநாயகா! எப் படியோ இன்று குருகுலம் செல்ல நேரமாகி விட்டது. நான் அங்கு சென்றிருந்தால் அவர் என்ன கற்றுக் கொடுத்திருப் பாரோ, அதை நீயே சொல்லிக் கொடேன்…’ என்றார் நம்பி.

அவனுக்கு அனைத்து ஞானத் தையும் போதித்து, மறைந்து விட்டார் விநாயகர்.

மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தான் நம்பி. பெற்றவர்கள் ஊர் திரும்பியதும் நடந்ததையெல்லாம் சொன்னான். அவர் கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. இந்த விஷயம் ராஜராஜசோழனுக்கு எட்டியது. அவன் நம்பியாண்டார் நம்பியின் இல்லத்துக்கே வந்துவிட்டான். விநாயகருக்கு நைவேத்யம் செய்து அவர் சாப்பிடுவதைக் கண்ணார கண்டு களிக்க வேண்டும் என்றான்.

அதன்படியே, கோவிலுக்குச் சென்று விநாயகரை சாப்பிட வைத்தார் நம்பி. மன்னனும், மக்களும் ஆச்சரியப் பட்டனர். அவரது மகிமையை உணர்ந்த மன்னன், தில்லையம்பலத்தில் பூட்டிக் கிடக்கும் அறையில் மூவர் பாடிய தேவாரமும், தொகையடியார்கள் வரலாறும் இருப்பதைச் சொல்லி, அவற்றை வெளியே கொண்டு வர ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அதன்படி, அவர்கள் அங்கு சென்று புற்று மண்டிக்கிடந்த அறையில் இருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து வந்தனர். நம்பியாண்டர் நம்பி அவற்றை 11 திருமுறைகளாகப் பிரித்தார். அவை இன்றும் நமக்கு இசையின்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

குழந்தை போல களங்கமற்ற உள்ளங்களுக்கு கடவுள் தெரிவான் என்பதை நம்பியாண்டார் நம்பி வரலாறு உணர்த்துகிறது.

Monday, November 14, 2011

ஸ்ரீ காலபைரவாஷ்டகம்


தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   1

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   2

ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..   3

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   4

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   5

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   6

அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   7

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..   8

          .. பல ஷ்ருதி ..
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

.. இதி ஸ்ரீமசங்கராசார்யவிரசிதம் 
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே...




சிவமயம்

1) மண்ணாதி பூதமோடு விண்ணாதி அண்டம் நீ மறை நான்கின்
அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டலமிரண்டேழும் நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும்
நீ பிறவும் நீ ஓருவ நீயே, பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் நீ தந்தை நீயே, பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ
ஓளியும் நீ போதிக்கவந்த குரு நீ,புகழொணாக கிரகங்களொன்பதும் நீ
இந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளில்
இருப்பவனே என் குறைகளார்க் குரைப்பேன்,

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

2) மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட ,
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை
முருகேசனாட ஞான சம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனியட்ட
பாலகருமாட நரை தும்பையறுகாட நந்திவாகனமாட நாட்டியப்
பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி இது வேளை
விருதோடு ஆடி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே .


3) கடலென்ற புவிமீதில் அலையென்ற வுருக்கொண்டு கனவென்ற
வாழ்வை நம்பிகாற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்தம் நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்றயிரைதேடி
ஓயாமலிரவு பகலும் உண்டுண்டுறங்குவதைக் கண்டதேயல்லாது
ஒருபயனடைந்திலேனே ! தடமென்ற மிடி கரையில் பந்தபாசங்களெனும்
தாபம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனையிவ் வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று
கேளாதிருப்பதுன் அழகாகுமோ

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே .


4) வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம்தம்பனம் வசியமல்ல பாதாள
வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல ஜாலமல்ல அம்பு குண்டுகள்
விலக மொழியு மந்திரமல்ல 
ஆகாய குளிகையல்ல அன்போடு
செய்கின்ற வாத மோடிகளல்ல அரியமோகனமுமல்ல கும்பமுனி
மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும்,
கோரக்கர் வள்ளுவர் போக முனி இவரெலாங் கூறிடும்
வைத்தியமல்ல , என் மனது உன்னடிவிட்டு நீங்காது நிலை நிற்க
வேயுளவு புகல வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

5) நொந்துவந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும் செவியென்ன
மந்தமுண்டா நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டா சந்ததமுன் தஞ்சமென்றடியைப்
பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ தந்திமுகனறு முகன்
இரு பிள்ளை இல்லையோ தந்தை நீ மலடு தானோவிந்தையும்
ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்று மறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதல் வேடிக்கை
இதுவல்லவோ இந்த உலகீரேழு மேனளித்தாய் சொல்லும்
இனி உன்னை விடுவதில்லை

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

6)வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத
போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த போதிலும் மொழிகளை மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனேன்
முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே
யாகினும் பழியெனக் கல்லவே தாய் தந்தை கல்லவோ பார்த்தவர்கள்
சொல்லார்களோ பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலகனைக்
காக்கொணாதோ யெழில் பெரிய அண்டங்களடுக்கா யமைத்த நீயென்
குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.
7)அன்னை தந்தகைளென்னை யீன்றதற் கழுவனோஅறிவிலாததற்
கழுவனோஅல்லாமல்நான் முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோமுன் பிறப்பென்னவினை செய்தனென்றழுவனோ
என் மூடவறிவுக் கழுவனோ முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்திவருமென்றுணர்வனோ தன்னை நொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோதவமென்ன வென்றழுவனோ தையலர்க்ழுவனோ மெய்வளர்க் கழுவனோ தரித்திரதிசைக்கழுவனோ
இன்னமென்ன பிறவி வருமோ வென்றழுவனோ யெல்லா முறைக்க
வருவாய்,


ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.


8)காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டேனோ கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருளிலையென்றனோ தானென்று கெர்வித்துக கொலை களவு செய்தனோ தவசிகளை யேசினேனோ வாயாரப பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரைப் பழித்திட்டனோ வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என்செய்தேனோ ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ யெல்லாம் பொறுத்தருளுவாய்


ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.


9)தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன தன் பிறவியுறவுகோடி தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன தாரணியை யாண்டுமென்ன சேயர்களிருந்தென்ன குருவா இருந்தென்ன சீடர்களிருந்து மென்ன, சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம் ஒயாது மூழ்கினும என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம் தந்தையுறவென்றுதான் உன்னிருபாதம் பிடித்தேன். யார் மீது உன் மனமிருந்தாலுமுன் கடைக்கண் பார்வை அது போதும்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

10)இன்னமுஞ் சொல்லவோ உன் மனங்கல்லோ இரும்போ பெரும் பாறையோ இரு செவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகுதானோ என்னென்ன மோகமோ இது வென்ன சாபமோ இதுவே உன் செய்கைதானோ இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமேயானாலும் நான் விடுவனோ உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனை யடுத்துங்கெடுவனோ, ஓகோவிது உன்குற்ற மென்குற்றமொன்றுமில்லை. உற்றுப்பார் பெற்றவையா என்குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனியருளளிக்க வருவாய்,

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன்வரை, சற்றெனக்குள்ளாக்கி ராசிபனிரெண்டையும் சமமாய் நிறுத்தியுடனே பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால், பகர்கின்ற கிரணங்கள் பதிணொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி யென்முன் கனி போலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங் கசக்கிகர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி இனியவளமருவு சிறுமணவை முனிசாமியெனை யருள்வதினியுன் கடன் காண்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.