ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Monday, November 14, 2011

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே...




சிவமயம்

1) மண்ணாதி பூதமோடு விண்ணாதி அண்டம் நீ மறை நான்கின்
அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டலமிரண்டேழும் நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும்
நீ பிறவும் நீ ஓருவ நீயே, பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் நீ தந்தை நீயே, பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ
ஓளியும் நீ போதிக்கவந்த குரு நீ,புகழொணாக கிரகங்களொன்பதும் நீ
இந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளில்
இருப்பவனே என் குறைகளார்க் குரைப்பேன்,

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

2) மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட ,
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை
முருகேசனாட ஞான சம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனியட்ட
பாலகருமாட நரை தும்பையறுகாட நந்திவாகனமாட நாட்டியப்
பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி இது வேளை
விருதோடு ஆடி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே .


3) கடலென்ற புவிமீதில் அலையென்ற வுருக்கொண்டு கனவென்ற
வாழ்வை நம்பிகாற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்தம் நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்றயிரைதேடி
ஓயாமலிரவு பகலும் உண்டுண்டுறங்குவதைக் கண்டதேயல்லாது
ஒருபயனடைந்திலேனே ! தடமென்ற மிடி கரையில் பந்தபாசங்களெனும்
தாபம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனையிவ் வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று
கேளாதிருப்பதுன் அழகாகுமோ

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே .


4) வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம்தம்பனம் வசியமல்ல பாதாள
வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல ஜாலமல்ல அம்பு குண்டுகள்
விலக மொழியு மந்திரமல்ல 
ஆகாய குளிகையல்ல அன்போடு
செய்கின்ற வாத மோடிகளல்ல அரியமோகனமுமல்ல கும்பமுனி
மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும்,
கோரக்கர் வள்ளுவர் போக முனி இவரெலாங் கூறிடும்
வைத்தியமல்ல , என் மனது உன்னடிவிட்டு நீங்காது நிலை நிற்க
வேயுளவு புகல வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

5) நொந்துவந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும் செவியென்ன
மந்தமுண்டா நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டா சந்ததமுன் தஞ்சமென்றடியைப்
பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ தந்திமுகனறு முகன்
இரு பிள்ளை இல்லையோ தந்தை நீ மலடு தானோவிந்தையும்
ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்று மறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதல் வேடிக்கை
இதுவல்லவோ இந்த உலகீரேழு மேனளித்தாய் சொல்லும்
இனி உன்னை விடுவதில்லை

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

6)வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத
போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த போதிலும் மொழிகளை மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனேன்
முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே
யாகினும் பழியெனக் கல்லவே தாய் தந்தை கல்லவோ பார்த்தவர்கள்
சொல்லார்களோ பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலகனைக்
காக்கொணாதோ யெழில் பெரிய அண்டங்களடுக்கா யமைத்த நீயென்
குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.
7)அன்னை தந்தகைளென்னை யீன்றதற் கழுவனோஅறிவிலாததற்
கழுவனோஅல்லாமல்நான் முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோமுன் பிறப்பென்னவினை செய்தனென்றழுவனோ
என் மூடவறிவுக் கழுவனோ முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்திவருமென்றுணர்வனோ தன்னை நொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோதவமென்ன வென்றழுவனோ தையலர்க்ழுவனோ மெய்வளர்க் கழுவனோ தரித்திரதிசைக்கழுவனோ
இன்னமென்ன பிறவி வருமோ வென்றழுவனோ யெல்லா முறைக்க
வருவாய்,


ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.


8)காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டேனோ கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருளிலையென்றனோ தானென்று கெர்வித்துக கொலை களவு செய்தனோ தவசிகளை யேசினேனோ வாயாரப பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரைப் பழித்திட்டனோ வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என்செய்தேனோ ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ யெல்லாம் பொறுத்தருளுவாய்


ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.


9)தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன தன் பிறவியுறவுகோடி தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன தாரணியை யாண்டுமென்ன சேயர்களிருந்தென்ன குருவா இருந்தென்ன சீடர்களிருந்து மென்ன, சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன நதிகளெல்லாம் ஒயாது மூழ்கினும என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ இதுவெல்லாம் தந்தையுறவென்றுதான் உன்னிருபாதம் பிடித்தேன். யார் மீது உன் மனமிருந்தாலுமுன் கடைக்கண் பார்வை அது போதும்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

10)இன்னமுஞ் சொல்லவோ உன் மனங்கல்லோ இரும்போ பெரும் பாறையோ இரு செவியும் மந்தமோ கேளாது அந்தமோ இது உனக்கழகுதானோ என்னென்ன மோகமோ இது வென்ன சாபமோ இதுவே உன் செய்கைதானோ இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமேயானாலும் நான் விடுவனோ உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனை யடுத்துங்கெடுவனோ, ஓகோவிது உன்குற்ற மென்குற்றமொன்றுமில்லை. உற்றுப்பார் பெற்றவையா என்குற்றமாயினும் உன் குற்றமாயினும் இனியருளளிக்க வருவாய்,

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன்வரை, சற்றெனக்குள்ளாக்கி ராசிபனிரெண்டையும் சமமாய் நிறுத்தியுடனே பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால், பகர்கின்ற கிரணங்கள் பதிணொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி யென்முன் கனி போலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங் கசக்கிகர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி இனியவளமருவு சிறுமணவை முனிசாமியெனை யருள்வதினியுன் கடன் காண்

ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.

No comments: