ஹர ஹர நம: பார்வதி பதயேஹர ஹர மஹா தேவா

Sunday, September 18, 2011

சிவ நாம மஹிமை


நம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம். அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ' என்பார்கள்.
அப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'. இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம். இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயக்ஷரமான 'சிவ'.

உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்கிறார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதை திருவள்ளூவர் மெய்ப்பொருள் என்று கூறுகிறார். வேதங்களை எல்லாம் ஒரு சரீரமாக, மெய்யாக வைத்துக் கொண்டால் அத்ல் உயிராக, மெய்ப் பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால் அந்த ஹ்ருதயம், சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானசம்மந்தர் பின்வருமாறு சொல்கிறார்.

வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாத (ன்) நாமம் நமசிவாயவே

அவ்வைப் பாட்டி செய்த 'நல்வழி' என்னும் நூலில்,

சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு)
அவாயம் (அபாயம்) ஒருநாளும் இல்லை'

என்று சொல்லியிருக்கிறார்.

சிவநாமத்தின் மஹிமையை அம்பாள் சொல்வதாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. தாக்ஷாயணி ப்ரபாவம் பற்றிச் சொல்கையில், தாக்ஷாயணி ப்ராணத்யாகம் செய்யும் சந்தவேசத்தில், 'த்வயக்ஷரம் நாம கிரா' என்று, அதாவது பஞ்சாக்ஷரமாக எல்லாம் இல்லாது, 'சிவ' என்ற இரு எழுத்துக்களை உச்சரித்தாலேயே சர்வ பாபங்களையும் போக்கிவிடும் என்கிறாள். இதையே திருமந்திரத்தில் "சிவ சிவ என்கிலர் தீவினையாளர் " என்று திருமூலரும் சொல்வது.

No comments: